×

சென்னை பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் சாய்பிரசாத் மீது இளையராஜா போலீசில் புகார்..!!

சென்னை: சென்னை பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் சாய்பிரசாத் மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் ஒன்றினை தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா சார்பாக அவரது வழக்கறிஞர், கூடுதல் ஆணையர் தினகரன் அவர்களை சந்தித்து புகார் மனுவினை அளித்துள்ளார். இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவை நீண்ட காலமாக பயன்படுத்திவந்தார். இது தொடர்பாக ஒரு சர்ச்சையானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

குறிப்பாக இவர் பணியில் இருக்கும் போது ஸ்டுடியோவில் பல்வேறு வேலைப்பாடுகள் நடைபெறுவதாகவும், மேலும் தொடர்ந்து தொந்தரவு செய்யப்படுவதாக அதன் உரிமையாளர் சாய்பிரசாத் மீது குற்றச்சாட்டு முன்வைத்து அது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பிரசாத் ஸ்டுடியோ இளையராஜாவுக்காக ஒதுக்கப்பட்டது என்பது தொடர்பாக ஒப்பந்தம் உள்ளதா உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இது தொடர்பாக இளையராஜா சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கானது தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான் தற்போது புதிய புகார் ஒன்றினை கூடுதல் ஆணையர் தினகரனிடம் இளையராஜா சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் பிரசாத் டிஜிட்டல் லெபாரட்டரீஸ் வளாகத்தில் 25 ஆண்டாக தமக்கு தனியறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரசாத் ஸ்டுடியோ நிறுவனரான எஸ்.வி.பிரசாத் ஓர் அறையை தமது பயன்பாட்டிற்காக வழங்கியிருந்தார். எஸ்.வி.பிரசாத் மறைவிற்கு பின் அவரது மகன் ரமேஷும் குறிப்பிட்ட அறையை பயன்படுத்த அனுமதித்திருந்தார். தற்போதைய உரிமையாளரான ரமேஷ் மகன் சாய் பிரசாத் தன்னை வெளியேற்ற முயற்சிக்கிறார். பிரசாத் லேபில் உள்ள தனது ஸ்டுடியோவில் விலை உயர்ந்த கருவிகளை வைத்துள்ளேன். தற்போது தனது ஸ்டுடியோவில் வைத்துள்ள இசைக்கருவிகளை சாய் பிரசாத் சேதப்படுத்திவிட்டார்.

மேலும் தான் எழுதி வைத்திருந்த இசைக்குறிப்புகளை பெருந்தொகைக்கு சாய் பிரசாத் விற்றுவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். எனவே உடைமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக சாய் பிரசாத் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கைவிடுத்தார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Sai Prasad ,Ilayaraja ,Chennai Prasad Studio ,Saiprasad , Chennai Prasad Studio , Saiprasad , Ilayaraja police .. !!
× RELATED இளையராஜா வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்