×

தமிழகத்தின் பல இடங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம்!: நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்த வலியுறுத்தல்..!!

மதுரை: தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்ட நீதிமன்றங்களை திறந்து வழக்கம் போல் நேரடி விசாரணை நடத்த வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துக் கொண்டனர். மூடப்பட்டுள்ள நீதிமன்றங்களை உடனடியாக திறக்க வேண்டும். கிரிமினல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக மத்திய அரசு அமைத்துள்ள குழுவை கலைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாவது, தமிழகத்தில் பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் அரசுக்கு வருமானம் வேண்டும் என்ற நோக்கத்தில் டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றங்களில் வழக்கறிஞர் பணிபுரிய மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நடக்கின்ற கொடுமைகளை வழக்கறிஞர்கள் வெளியே கொண்டுவந்து விடுவார்கள் என்பதற்காக இது ஒரு சூழ்ச்சியாக தெரிகிறது. எனவே உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் திறக்கப்பட வேண்டும். அங்கு சமூக இடைவெளியோடு வழக்கறிஞர்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதனைப் போலவே, தஞ்சாவூரில் ஊர்வலமாக வந்த வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்படுவதால் வழக்கறிஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சிவகங்கையில் புதிய நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இதேபோன்று நெல்லை, திருவண்ணாமலை, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Lawyers ,Tamil Nadu ,courts , Lawyers protest , Tamil Nadu,
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...