×

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் அனைத்து தமிழரையும் அழைத்து வர தீர்க்கமாக உள்ளதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம்..!!

சென்னை : வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் அனைத்து தமிழரையும் அழைத்து வர தீர்க்கமாக உள்ளதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதி கேட்டு திமுக செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணையில் மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை அழைத்து வர 127 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி தி.மு.க இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாடுகளில் சிக்கியுள்ள சுமார் 26 ஆயிரம் பேரை மீட்க 146 விமானங்கள் தேவைப்படும் நிலையில், அதற்கான விளக்கத்தை மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை என தி.மு.க சார்பில் வாதாடப்பட்டது.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள 25,939 தமிழர்களை தமிழகம் அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் இந்திய சமூக நல நிதியம் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது தொடர்பாகவும் விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப் பட்ட நிலையில் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை அழைத்து வர 127 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து தமிழரையும் அழைத்து வர தீர்க்கமாக உள்ளதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

Tags : High Court ,Central ,Tamils , Abroad, Tamils, Central Government, High Court, Guarantee
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...