×

ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரிக்கை.: ஆகஸ்ட் 4 ம் தேதி விசாரணைக்கு வருகிறது வழக்கு

சென்னை : ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்ததாக தமன்னா மற்றும் விராட் கோலியை கைது செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சீட்டு விளையாடியதாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நெல்லையைச் சேர்ந்த சிலுவை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய பரிந்துரைத்தார்.

மேலும் பொழுது போக்குக்காகவே சீட்டு விளையாடியதாக சிலுவை தரப்பிலான வாதத்தை ஏற்று, நீதிபதி புகழேந்தி சிலுவை வழக்கை ரத்து செய்தார். அத்துடன், பொழுதுபோக்குக்காக சீட்டு விளையாடுவோர் மீது வழக்குப்பதிவு பதிய வேண்டாம் என்று போலீசாருக்கு அறிவுறுத்திய நீதிபதி புகழேந்தி, பணம் வைத்து சீட்டு விளையாடுபவர்கள் மீது வழக்கு தொடரலாம் என கூறினார். அதனைத் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளுக்கு தடை விதித்தது போல், ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று நீதிபதி கருத்து தெரிவித்து இருந்தார்.

தெலுங்கானாவில் ஆன்லைன் சீட்டு விளையாட்டுக்கு அரசு தடை விதித்து உள்ளது என கூறி, செல்போனை திறந்தாலே மோசடியான விளையாட்டு விளம்பரங்கள் தான். பணத்தை மையமாக வைத்து பல ஆன்லைன் விளையாட்டுகள் நடைபெறுகிறது. வேலையில்லா இளைஞர்களின் நேரம், சிந்திக்கும் திறனை ஆன்லைன் விளையாட்டுகள் கெடுகிறது. ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்ய அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி அப்போது தெரிவித்தார்.

இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் தமன்னா மற்றும் விராட் கோலி நடித்து இருந்தனர். எனவே ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னா ஆகியோரை கைது செய்யக் கோரி தற்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் சூரிய பிராகாசம் தாக்கல் செய்த மனு ஆகஸ்ட் 4 ம் தேதியன்று விசாரணைக்கு வர உள்ளது தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Virat Kohli ,arrest ,Tamanna ,Tamanna: Case , Virat Kohli, online ,sports, commercials, ,Tamanna: Case , August 4
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...