×

தி.மலை வந்தவாசி அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு..!! வங்கி கணக்கில் பணம் எடுப்பதாக புகார்!!

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வந்தவாசி அருகே வேடால் கிராமத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 13 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருளர் சமூகத்தை சேர்ந்த அவர்கள் தங்களால் வீடு கட்ட இயலாது என கூறியதால் கட்டுமான பணியை ஊராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், அவர்களது வங்கி கணக்கிலிருந்து 75 சதவீதம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடுகள் ஏதும் அமைக்கப்படாமல் வெறும் தூண்கள் மட்டுமே எழுப்பப்பட்டுள்ளதாக இருளர் இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது மழைக்காலம் தொடங்கிய நிலையில் பச்சிளம் குழந்தைகளை வைத்து கொண்டு வீடு இல்லாமல் மிகவும் அவதிப்படுவதாக அவர்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், கட்டுமானத்திற்கு பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் தரமில்லாததாக இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, நல்லமுறையில் வீடுகளை கட்டித்தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கட்டித்தருவதாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : construction ,T.Malai Vandavasi ,house , Prime Minister's house scheme, T.Malai ,Vandavasi,
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...