×

புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு கொரோனா மீது இருந்த பயம் போனதா... அதனுடன் வாழ பழகிக்கொண்டார்களா..?

திருமயம்: புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் மீது இருந்த பயம் போனதா? அல்லது அதனுடன் வாழ பழகிக்கொண்டார்களா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். உலகில் முதன் முதல் முதலில் சீனாவில் கொரோன வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மற்ற நாட்டினர் அதை வெறும் செய்தியாக பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஐரோப்பிய, அமெரிகக்க நாடுகளில் புயல் வேகத்தில் பரவியதோடு இறப்பு விகிதமும் அதிகரித்ததால் உலக நாடுகள் அனைத்தும் விழிப்படைய ஆரம்பிப்பதற்குள் அடுத்தடுத்த நாடுகளுக்கு வைரஸ் பரவல் அதிகரித்தது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தும் முடியாததால் கடைசியாக ஊராடங்குதான் ஒரே வழி என முடிவு செய்து தற்போது ஏறத்தாள உலக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் இந்தியாவில் இந்த நோய் பற்றி தற்போது ஆளும் அரசு தொடக்க காலத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தியாவில் இந்த பரவலை கட்டுப்படுத்திருக்கலாம் என கட்சிகளுக்குள் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசின் அலட்சியமான நடவடிக்கையால் நாட்டில் உள்ள ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டினர். தற்போது வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறுவித ஊரடங்கை அமல்படுத்திய நிலையில் மக்கள் அன்றாட பிழைப்புக்கு வேறுவழியின்றி ஊரடங்கை மீறுவதும் இதனால் பல குழப்பங்களில் சிக்கி அரசு செய்வதறியாது தவித்து வருகிறது. ஒருகட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியாத தமிழக அரசு ஊரடங்கு பொறுப்பை கலெக்டரிடம் ஒப்படைத்து தப்பித்துக்கொண்டது. இது தற்போது ஊரடங்கு அமல்படுத்தும் பொறுப்பு வணிகர் சங்கம் கையில் வந்துள்ளதாகவே எண்ண தோன்றுகிறது. காரணம் பெரும்பாலும் தற்போது வணிகர் சங்கங்களே தானாக முன் வந்து ஊரடங்கைஅமல்படுத்தி வருகின்றனர். இருந்த போதிலும் வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரிக்கிறதே தவிர குறைந்ததாக தெரியவில்லை.

புதுக்கோட்டையில் வைரஸ் பரவல்: தமிழகத்தில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பிப்ரவரி மாதவாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஒரு இலக்க எண்ணிக்கையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நோய் பரவ தொடங்கியது. அப்போது தமிழக அரசு தொற்றை அரசு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் மற்ற மாநிலங்களுக்கு தமிழக அரசு எடுத்துக்காட்டாக திகழ்வதாக பெருமைப்பட்டுக் கொண்டனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று அடுத்தடுத்த நாட்களில் பரவியபோதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் ஒன்றரை மாதம் வரை ஒருநோய் தொற்று கூட இல்லாமல் இருந்தது. இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் என கட்சியினர் பெருமிதம் அடைந்த வந்தனர். இதனை தொடர்ந்து நீண்டநாட்களை தொற்றில்லாமல் கடந்த புதுகை தனது முதல் தொற்றை அரிமளம் அருகே உள்ள மிரட்டுநிலையில் தொடங்கியது. அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைவரும் பக்கத்து வீட்டில் தொற்று வந்ததுபோல் பதற்றமடைந்தனர். அதாவது மிரட்டுநிலை கிராமமக்கள் அனைவரையும் சுற்றுவட்டார கிராம மக்கள் நோயாளிபோல் பார்க்க தொடங்கினர். இது அக்கிராம மக்களை அப்போது பாதித்தது என்றே கூற வேண்டும். இதற்கு ஏற்றார்போல் சுகாதாரதுறை அதிகாரிகளும் தொற்று பாதிக்கப்பட்ட மிரட்டுநிலை கிராமத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சாலையில் கூட யாரும் செல்லமுடியாதபடி தடுப்புகள் அமைத்து ராணுவ கட்டுப்பாடு போல் பாதுகாத்து வந்தனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து அடுத்த வைரஸ் தொற்றும் அரிமளம் ஒன்றியத்தில் காணப்பட்டதால் மாவட்டத்தில் அரிமளம் அனைவராலும் கவனிக்கப்படும் பகுதியாக மாறியது. அப்போது நோய் தொற்று உள்ள கிராமத்தில் இருந்து பல கி.மீ. தொலைவில் உள்ள கிராம மக்களும் தங்கள் கிராமத்தை பாதுகாக்க சாலையில் தடுப்புகள் அமைத்து பெரிய அளவில் பாதுகாத்து வந்தனர். இதனை தொடர்ந்து நாட்கள் கடக்க கடக்க நோய் தொற்று மாவட்டம் முழுவதும் அதிகரிக்க தொடங்கியது. பெரும்பாலும் நோய் தொற்று வெளி மாவட்டத்தில் இருந்து வந்த நபர்களிடமிருந்து காணப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வரும் நபர்களை கையாளுவதில் மாவட்ட நிர்வாகம் தவறவிட்டதாக ஒருபுறம் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனிடையே தற்போது மாவட்டத்தில் அதிகபட்சமாக தொற்று இருப்பதை கண்டுபிடித்த போதிலும் மக்களிடையே மாவட்டத்தில் முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்டபோது இருந்த பதற்றம், பயம் குறைந்துள்ளதாகவே தெரிகிறது. காரணம் மாவட்டம் முழுவதும் அரசு போக்குவரத்தை தவிர மற்றவைகள் வழக்கம் போல் செயல்படுதால் பெரும்பாலான மக்கள் அரசு அறிவித்த சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டுவிட்டு திரிவதை காண முடிகிறது. அதேசமயம் முதல் தொற்று பாதிக்கப்பட்டபோது ஒரு கிராமமே முடக்கப்பட்ட நிலை போய் தற்போது பாதிக்கப்பட்ட குடும்பம் மட்டுமே தனிமைபடுத்தப்படுகிறது. இதனால் மக்களும் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. எனவே மக்களுக்கு நோய் மீது இருந்த பயம் போய்விட்டதா அல்லது நோயுடன் வாழ மக்கள் பழகிக்கொண்டார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனிடையே மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த வேறுவழியின்றி வெளியே நடமாடவேண்டிய சூழல் உருவாகி உள்ளதை தவிர்க்க முடியாது என தெரிவித்தனர். மேலும் மக்கள் அரசுடன் இணைந்து அரசு கூறும் நெறிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே வரும் நாட்களில் நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.

Tags : Pudukkottai district , Pudukkottai district,corona,
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...