×

கொரோனா ஊரடங்கால் குர்பானி ஆடுகள் விற்பனை மந்தம்

அன்னூர்: கோவை மாவட்டம் அன்னூரில் வாரந்தோறும் ஆடு, கோழி சந்தை நடைபெறுவது வழக்கம். குறிப்பாக தீபாவளி, ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கும் மேலாக வியாபாரம் நடைபெறும்.  
இதுபோன்ற விழாக்காலங்களில் சுற்றுவட்டார கிராமங்களில் பெருமளவில் வெள்ளாடு, செம்மறி ஆடுகளை விற்பதற்காக வளர்த்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் அன்னூர் கால்நடை சந்தை கடந்த 4 மாதமாக மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது பக்ரீத் பண்டிகை விற்பனையும் களைகட்டவில்லை. கடந்த ஆண்டு பண்டிகையின்போது 800 முதல் 1200 வரையிலான ஆடுகள் விற்பனையான நிலையில், இந்த வருடம் 200 ஆடுகள்கூட விலை போகவில்லை என வியாபாரிகள் ெதரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வரும் சனிக்கிழமை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையை எளிமையாக கொண்டாட முடிவு செய்து இஸ்லாமியர்கள் குர்பானி கொடுப்பதற்காக ஆடுகள் வாங்க தயக்கம் காட்டுகின்றனர். மேலும் கடந்த​ 4 மாதமாக வேலையின்மை, பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவதில் தயக்க நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற மதத்தைச் சார்ந்த சக நண்பர்களுக்கும் குர்பானி வழங்க இயலாத நிலை குறித்து வருத்தம் அளிப்பதாகவும் ெதரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘குர்பானி ஆடுகள் அதிகளவில் வளர்த்து வருகிறோம். ஆடு ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் கூடுதலாக விற்பனை செய்கிறோம். இருந்தபோதிலும் அதிகளவில் 20 சதவீத ஆடுகளே விற்பனையாகியுள்ளது. 80 சதவீத ஆடுகள் தேக்கமடைந்துள்ளது. இவை மேலும் ஒரு வருட காலத்திற்கு வளர்க்க வேண்டும். இதனால் வளர்ப்பு கூலி அதிகமாகி எங்களுக்கு நஷ்டம் ஏற்படும். வரும் காலங்களில்​ இவை வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் ஆடுகள் என்பதால் இவற்றின் விலையும் குறையும் வாய்ப்புள்ளது’’ என்றார்.

வியாபாரிகள் கூறுகையில் ‘‘இ-பாஸ் பெற்று நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து  கிராமங்கள்தோறும் வாகனங்களில் சென்று ஆடுகளை கொண்டு வர தேவைப்படும் வாகன வாடகை,  ஆடுகளுக்கான தீவனம் வாங்குதல் போன்ற கூடுதல் செலவுகளை சமாளிக்க முடியவில்லை. மேலும், கிராமங்களில் வளர்த்து வரும் குர்பானி ஆடுகளை வாங்க இம்முறை பலரும் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆட்டிறைச்சிகளை டோர் டெலிவரி தரத் தயார் என நூதன முறையில் பேஸ்புக், வாட்ஸ்அப்பில் விளம்பரம் செய்தபோதும், எதிர்பார்த்த அளவிற்கு ஆர்டர் கிடைக்கவில்லை’’ என்றனர்.

Tags : Recession , Qurbani goats , corona pandemic
× RELATED உலக அளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது: நிர்மலா சீதாராமன் உரை