×

விளைநிலத்தில் கொட்டப்பட்ட 100 டன் சாய திடக்கழிவுகள்

ஈரோடு: ஈரோடு அருகே விவசாய நிலத்தில் 100 டன் சாய திடக்கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மாசுகட்டுப்பாடு, வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.  ஈரோடு அடுத்துள்ள வெள்ளோடு கனகபுரம் செம்பாண்டாம்வலசு பகுதியை சேர்ந்த விவசாயிகளான நாச்சிமுத்து, பழனிசாமி, சாமியப்பன் ஆகியோரின் விவசாய நிலத்தில் தென்னை மரங்கள் உள்ளது. இவர்களின் நிலத்தில்  நேற்று காலை சுமார் 100 டன் திடக்கழிவு மூட்டைகள் கொட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் பெருந்துறை மாசுகட்டுப்பாடு வாரிய பொறியாளர் உதயகுமார், ஈரோடு செந்தில்விநாயகம் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மொடக்குறிச்சி தாசில்தார் ரவிச்சந்திரன், வெள்ளோடு போலீசார் ஆகியோர் விவசாய நிலத்தில் கொட்டப்பட்டிருந்த திடக்கழிவுகளை ஆய்வு செய்தனர். இதில் ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளில் சேகரிக்கப்பட்டு வைத்திருந்த திடக்கழிவுகளை கொண்டு வந்து கடந்த சில நாட்களாக விவசாய நிலத்தில் கொட்டியது தெரியவந்தது. கடைசியாக நேற்று முன்தினம் இரவு டாரஸ் லாரியில் சுமார் 15 டன் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட விவசாயிகளிடம் விசாரித்தபோது விவசாய நிலத்திற்கு உரமாக பயன்படும் என்று கூறியதால், இடைத்தரகர் ஒருவர் மூலம் திடக்கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டதாக கூறினர். இதையடுத்து விவசாயிகள் கூறிய இடைத்தரகரை தொடர்பு கொண்ட போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவித்தனர். இடைத்தரகரிடம் விசாரணை நடத்தினால்தான் இதன் முழு பின்னணி என்ன? என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர்.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: விவசாய நிலத்தில் விவசாயிகளின் அனுமதியோடுதான் பல முறை சுமார் 100 டன் திடக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலத்திற்கு உரமாக பயன்படும் என்பதால் கழிவுகளை கொட்ட அனுமதித்ததாக விவசாயிகள் விசாரணையில் கூறி உள்ளனர். இது உண்மையா? அல்லது வேறு ஏதாவது நோக்கத்திற்காக கொட்டப்பட்டதா? என்பது குறித்தும், ஈரோட்டில் எந்தெந்த சாயப்பட்டறைகளில் இருந்து திடக்கழிவுகள் கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும் இடைத்தரகராக செயல்பட்ட நபர் பிடிபட்டால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும். இது தொடர்பாக வருவாய்துறை, காவல்துறை, மாசுகட்டுப்பாடு வாரியம் ஆகிய 3 துறையினரும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Tags : dye solid waste
× RELATED திருநெல்வேலி தொகுதி பாஜ வேட்பாளர்...