×

விருதுநகரில் வேரோடு பிடுங்கப்பட்ட 46 மரங்களுக்கு ‘மறுவாழ்வு’

விருதுநகர்:  விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி விரிவாக்கத்தின்போது வேரோடு அகற்றப்பட்ட 46 மரங்களுக்கு மறுவாழ்வு அளித்ததால் மீண்டும் துளிர்த்துள்ளன. விருதுநகர், ராமமூர்த்தி ரோட்டில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்றும் வகையில் 80மீ நீளம், 80மீ அகலத்தில் 7 மாடி கட்டிடம் கட்டும் பணி துவங்கியுள்ளது.  இதற்காக ஏற்கனவே இருந்த பல கட்டிடங்கள் முழுமையாக இடிக்கப்பட்டன.

அப்போது 15 முதல் 50 ஆண்டுகள் பழமையான புங்கை, வேம்பு, ஆயன், வாகை, அரசு என 46 மரங்கள் அகற்றப்பட நேர்ந்தது. மரங்கள் அனைத்தும் அழியாமல் பாதுகாக்க முடிவெடுத்து, பழமையான மரங்களை பாதுகாக்கும் பொதுப்பணித்துறை மூலம் கோவை பாரதியார் பல்கலைக்கழக திட்ட அலுவலரும், ஓசை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளருமான சையதுவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரின் முயற்சியால், 2 மாதங்களுக்கு முன் 46 மரங்கள் வேரோடு பிடுங்கி, 6 கி.மீ தூரம் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன. தற்போது அந்த மரங்கள் அனைத்தும் துளிர் விட்டு வளர துவங்கியுள்ளன.

இதுகுறித்து சையது கூறுகையில், ‘‘தமிழகம் மட்டுமின்றி மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் 150க்கும் அதிகமான மரங்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளோம். தற்போது குஜராத்தில் புல்லட் ரயில் திட்டத்தில் அகற்றப்படும் மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன’’ என்றார்.

Tags : Virudhunagar , uprooted trees ,Virudhunagar
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...