×

சமூக விலகலின்றி ஆளுங்கட்சியினர் வரவேற்பு விழா ‘போறபோக்குல கொரோனா என்னை ‘டச்’ பண்ணிருச்சு...’

மதுரை: கொரோனா போறபோக்குல என்னை ‘டச் செய்து விட்டது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். இவருக்கு ஆளுங்கட்சியினர் சமூக இடைவெளியின்றி பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு கடந்த 10ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். குணமடைந்த நிலையில், கடந்த வாரம் சென்னை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அவர், நேற்று மாலை மனைவி ஜெயந்தியுடன் மதுரை திரும்பினார். அவருக்கு வரவேற்பு கொடுப்பதற்காக மதுரை அரசு மருத்துவமனை அமைந்துள்ள பனகல் ரோட்டில் உள்ள மாநகர அதிமுக கட்சி அலுவலகம் முன்பு கட்சி தொண்டர்கள் மேடை அமைத்திருந்தனர்.

மேடைக்கு அமைச்சர் வந்தபோது, தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர். பின்பு அமைச்சர் மனைவியுடன் மேடையில் ஏறினார். அவர்களுக்கு அதிமுகவினர் சால்வை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். சாலை முழுவதும் அவரின் ஆதரவாளர்கள் கூட்டமாக நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு வந்த ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் போதிய சமூக இடைவெளியின்றி கலந்து கொண்டனர். இவ்விழாவால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அமைச்சரே ஊரடங்கு உத்தரவை மீறலாமா என அந்த சாலையில் சென்ற பொதுமக்கள் முகம் சுளித்தபடி சென்றனர்.

இதனைத்தொடர்ந்து, அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நடிகர் வடிவேல் சொன்னது போல போறபோக்கில் ‘கொரோனா டச்’ பண்ணிட்டு போயிருச்சு. இப்போது குணமடைந்து விட்டேன். மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது அவர் அஞ்சிவிடக்கூடாது என்பதற்காக ஆறுதல் சொல்ல மருத்துவமனைக்கு சென்றபோது எனக்கும் தொற்று ஏற்பட்டது.  உரிய சிகிச்சை பெற்று இருவரும் குணமடைந்து விட்டோம்” என்றார்.

Tags : party reception ,Borapokkula ,party ,Reception , social distancing,admk,sellur raju,
× RELATED கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி?