×

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் சானிடைசர் குடித்து 7 பேர் உயிரிழப்பு: மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் விபரீதம்

பிரகாசம்: ஆந்திராவில் சானிடைசர் குடித்து 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், தர்ஷி மண்டலத்தில் உள்ள மதுக்கடைகள் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அவ்வப்போது கிருமிநாசினியான சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் அரசு கூறி வருகிறது. இந்த சானிடைசர்களில் 60 சதவிகிதத்திற்கும் மேல் ஆல்கஹால் கொண்டு  தயாரிக்கப்படுவதால், அதனை கைகளை சுத்தம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், அதனை அருந்தக்கூடாது எனவும் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், பலர் இதனை அருந்தி வருகின்றனர்.

அந்த வகையில், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் சானிடைசர் குடித்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். சாலையோரங்களில் உள்ள கூலித்தொழிலாளர்கள் மற்றும் பிச்சை எடுக்கக்கூடியவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலமாக சானடைசர்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்துள்ளன. அவ்வாறு வழங்கப்பட்ட சானிடைசர்களை, பிரகாசம் மாவட்டம் குறிச்சேடு பகுதியில் போதைக்காக சிலர் சாராயத்தில் கலந்து குடித்துள்ளனர். இதன் காரணமாக, நேற்று 2 பேர் உயிரிழந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர்களில் 3 பேர் பிச்சை எடுப்பவர்கள் என்றும், 4 பேர் குறிச்சேடு பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருமிசாசினி குடித்ததால் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Tags : Prakasam district ,Andhra Pradesh ,Liquor shops , Andhra Pradesh, Prakasam District, Sanitizer, Disinfectant, Death
× RELATED ‘மார்க் போடாவிட்டால் சூனியம்...