×

ஆப்கானிஸ்தானில் மர்ம நபர்கள் கார் வெடிகுண்டு தாக்குதல்!: 40க்கும் மேற்பட்டோர் பலியானதால் பதற்றம்..!!

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் மர்ம நபர்கள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியானதால் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போர் தொடங்கியதிலிருந்தே ஆப்கானிஸ்தான் அரசு படைக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. நீண்ட இழுபறிக்கு பின் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருதரப்புக்கும் இடையே முக்கியமான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி இந்த மாத இறுதிக்குள் தனது படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்நாட்டில் பயங்கரவாத தாக்குதல் மீண்டும் நடைபெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் மத்திய லுகார் மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை மர்மநபர்கள் வெடிக்க செய்துள்ளனர். இந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏராளமானோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு உடனடியாக எந்த பயங்கரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : car bomb attack ,Afghanistan , Afghan, mysterious persons, car bomb
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி