×

ரெட்டேரி மீன் பிடி குத்தகையை மீனவர்களுக்கு வழங்ககோரி போராட்டம்

புழல்: ரெட்டேரியில் மீன் பிடிக்கும் குத்தகையை மீனவர்களுக்கு வழங்கவேண்டும் என, மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அதில், மீனவர்களுக்கு ஆதரவாக பாஜவினர் பங்கேற்றனர். சென்னை புழல் அடுத்து மாதவரம் ரெட்டேரி சுமார் 380 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் அதிகளவில் மீன்கள் உள்ளன. இந்த மீன்களை பிடிப்பதற்கு, தமிழக பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 2018ம் ஆண்டு ஏலம் விடப்பட்டது. அப்போது, ஆதிதிராவிடர் உள்நாட்டு கூட்டமைப்பு நல சங்கத்தினர், ரூ.92 ஆயிரத்தை செலுத்தி, 5 ஆண்டுக்கு குத்தகை எடுத்ததுள்ளனர்.

இந்நிலையில், மீன் பிடிப்பதற்கான ஏலத்தை உள்ளூர் மீனவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், உள்ளூர் மீனவர்களுக்கே மீன் பிடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மற்றும் மீனவர் அணி சார்பில் நேற்று காலை 11 மணி அளவில் ரெட்டேரியில் போராட்டம் நடத்தினர். அப்போது, சென்னை மேற்கு மாவட்ட பாஜ பொதுச்செயலாளர் மாதவரம் சசிதரன், மீனவர் அணி மேற்கு மாவட்ட தலைவர் அம்பத்தூர் வினோத் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மீனவர்கள் ஏரிக்கு மீன் பிடிக்க வந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த புழல் போலீஸ் உதவி கமிஷனர் ஸ்ரீகாந்த், புழல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பென்சாம், மாதவரம் தாசில்தார் நிலா ஆகியோர் விரைந்து வந்து மீன் பிடிக்க வந்த பாஜக நிர்வாகிகள், உள்நாட்டு மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் இரண்டு மணி போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து உள்நாட்டு மீன் வியாபாரிகள், மீனவர்கள் கூறுகையில், ‘ரெட்டேரி மீன் பிடி குத்தகையை ரத்து செய்துவிட்டு, மீனவர்கள், மீன் வியாபாரிகளுக்கும் குத்தகையை வழங்க வேண்டும். அப்படி, செய்தால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் வியாபாரம் நடைபெறும். இது குறித்து தமிழக அரசு மற்றும் பொதுப்பணித் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில், மாநில அளவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.

Tags : fishermen , Ritteri fishing, lease fisherman, struggle
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...