×

கொரோனா நோயாளிகளை கண்டறிய தினமும் 10 லட்சம் பரிசோதனை: மத்திய அரசு புதிய இலக்கு

புதுடெல்லி: ‘‘அடுத்த ஓரிரு மாதங்களில் தினமும் 10 லட்சம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது,’’ என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார். கொரோனா வைரசை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, ‘கோவிட் -19 ஒழிப்பு அறிவியல் மற்றும் தொழிற்துறை தொழில்நுட்ப கவுன்சில்’ என்ற புதிய அமைப்பை மத்திய அரசு அமைத்துள்ளது. இதை, மத்திய சுகாதாரம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அவர் பேசியதாவது:

கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவ சமூகத்துடன் இணைந்து, விஞ்ஞானிகள் சமூகமும் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த ஜனவரி 30ம் தேதிதான் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அதன் பிறகு, 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும், இந்த வைரசுக்கு எதிரான போர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நமது நாடு மிகப்பெரிய நிலப்பரப்பையும், மிகப்பெரிய மக்கள் தொகையையும் கொண்டுள்ள போதிலும், மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இந்த வைரசுக்கு எதிரான போர் நடந்து கொண்டு இருக்கிறது. இதனால்தான், வைரசால் ஏற்படும் பாதிப்பு வெற்றிகரமாக தடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரலில் நாடு முழுவதும் தினமும் 6 ஆயிரம் கொரோனா பரிசோதனைகளை மட்டுமே செய்தோம். இப்போது, தினமும் 5 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்கிறோம். அடுத்த ஓரிரு மாதங்களில் தினமும் பத்து லட்சம் பரிசோதனைகளை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். கொரோனாவை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் சில நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. அவற்றுக்கு சிறிதும் சளைக்காமல், நமது நாடும் தடுப்பு மருந்து சோதனையில் வெற்றியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

3 லட்சம் வென்டிலேட்டர்
* கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை, வென்டிலேட்டர்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வந்தது.
* தற்போது, மருத்துவம் மற்றும் தொழிற்துறையில் செய்யப்பட்டுள்ள கட்டமைப்பு வசதிகளின் மூலம், உள்நாட்டிலேயே 3 லட்சம் வென்டிலேட்டர்களை தயாரிக்கும் திறனை எட்டியுள்ளது.
* அதோடு, உலகின் 150 நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை ஏற்றுமதி செய்து வருகிறது.

* ‘நோய் எதிர்ப்பு சமூகத்துக்கு வாய்ப்பில்லை’
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு அதிகாரி ராஜேஷ் பூஷண் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவின் பரப்பளவையும், மக்கள் தொகையையும் பொருத்தவரையில், ‘நோய் எதிர்ப்புசக்தி சமூகம்’ ஏற்படுவது சாத்தியமில்லை. அது போன்ற திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை. நோய் எதிர்ப்புசக்தி சமூகம் ஏற்பட வேண்டும் என்றால், நாட்டில் பல கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட வேண்டியிருக்கும். எனவே, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரையில், கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை இந்திய மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்,’’ என்றார்.

Tags : Target ,corona patients ,Government , Corona patient, 10 lakh daily, examination, federal government, new target
× RELATED நோயாளிகளின் மன அமைதிக்காக அரசு மருத்துவமனையில் புத்தர் சிலை