×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு அதிக நிதி செலவிட்டும் சென்னை இன்னும் சுமாரான சிட்டியாகவே இருப்பது ஏன்?: நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆவேச கேள்வி

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு அதிக நிதி செலவிடப்பட்டதாக கூறப்படும் நிலையில், சென்னை இன்னும் சுமாரான சிட்டியாகவே இருப்பது ஏன் என்று திசா குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்து, மாவட்டந்தோறும் ‘திசா’ என்ற மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் ஒருங்கிணைப்பு குழு ஆண்டுதோறும் 4 முறை ஆய்வு செய்யும். அதன்படி, சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் ஆய்வுக்கூட்டம் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பு குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன்,மாவட்ட வருவாய் அலுவலர் காளிதாஸ், எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் மா.சுப்பிரமணியன், மாதவரம் சுதர்சனம், சேகர்பாபு, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் தயாநிதி மாறன் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது:
இன்று நடந்த முதல் கூட்டத்தில்(நேரடியாகவும், காணொலி மூலமாகவும்) 12 எம்எல்ஏக்கள், 3 எம்பிக்கள் பங்கேற்றனர். இதில், மெட்ரோ ரயில் ரயில், இந்தியன் ரயில்வே, ஸ்மார்ட் சிட்டி, ஸ்வாச் பாரத் உள்ளிட்ட திட்டங்கள் பற்றி பேசினோம்.
சென்னை மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு அதிக அளவில் செலவிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். ஆனால், இன்னும் சென்னை சுமாரான சிட்டியாகவே இருக்கிறது. மத்திய அரசு நிறைய திட்டங்களை அறிவித்துள்ளது. இவை அனைத்துமே ஆரம்ப நிலையில்தான் இருக்கின்றன. கேரளாவில், கொரோனா காலத்தில் மதிய உணவு ஒவ்வொரு குழந்தைகளுக்கும் வீட்டிற்கே சென்று கொடுக்கப்பட்டது. அதைப்போன்று சென்னை மாநகராட்சி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினோம்?

மகளிர் மேம்பாடு, உணவு பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டத்தில் இதுவரை செய்தது என்ன? மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவில் விரிவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொரோனா பாதிப்பினால், அப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். கொரோனா பாதிப்பு குறைந்தால் அதன் பணிகள் எப்படி மேற்கொள்ளப்படும் என்று கேட்டோம். மேலும் இத்திட்டங்களின் கீழ் நடைபெறும் பணிகள் குறித்து, 10 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமான அறிக்கையை தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர் என்று கூறினார்.

Tags : Chennai ,Dayanidhi Maran , Smart City Project, More Finance, Chennai, Moderate City, Why, Dayanidhi Maran, Furious Question
× RELATED பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...