×

புதிய கல்விக் கொள்கை தலைவர்கள் கண்டனம்

சென்னை: அனைத்து தரப்பினரும் படிக்கக் கூடாது என்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம். எனவே அதை திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், வலியுறுத்தி உள்ளனர். வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி வெளிச்சம் பாய்வதை புதிய கல்விக் கொள்கை தடை செய்கிறது. நாட்டின் பன்முகத்தன்மைக்கும கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது இது. பாஜ அரசு திணிக்க முற்பட்டால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.எனவே புதிய கல்விக் கொள்கையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

திருமாவளவன் (விசிக தலைவர்): அனைவருக்கும் கல்வி என்பதற்கு மாறாக ஒரு சிலருக்கு மட்டுமே கல்வி என்ற வர்ணாசிரமக் கோட்பாட்டை மீண்டும் புகுத்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் ஆகும். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த கூடாது என மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

அன்புமணி (பாமக இளைஞர் அணி தலைவர்):மத்திய அரசு வெளியிட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையால் 3, 5, 8 ஆகிய 3 வகுப்புகளில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு, அதனடிப்படையில்தான் தேர்ச்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால், முதல் வகுப்பில் பள்ளியில் சேரும் குழந்தைகள் அடுத்த மூன்றாவது ஆண்டிலேயே பள்ளிப்படிப்பை கைவிடும் நிலை உருவாகி விடும். கல்வி முன்னேற்றம் என்ற பெயரில் 3ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது கொடூரமானதாகும். 8ம் வகுப்பு வரை எந்த வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தக்கூடாது. மாணவர்கள் புதிய மொழியை கற்றுக்கொள்ள வசதியாக மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மும்மொழிக் கொள்கை என்பது சமஸ்கிருத திணிப்பாகவே அமையும். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைகளுக்கு நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. நுழைவுத் தேர்வு என்பது அவர்களை உயர்கல்வியில் நுழையவிடாத தேர்வாக அமைந்துவிடும். இத்திட்டத்தை கண்டிப்பாக கைவிட வேண்டும்.

ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): பிரதமரை தலைவராக கொண்ட தேசிய  கல்விக்குழு அமைத்தல், 34 ஆண்டுகால இடைவெளிக்கு பின்பு இப்பொழுது  அறிவிக்கப்பட்டுள்ள கல்வி கொள்கை இது. புதிய நவீன இந்தியாவை அறிவாற்றல்  மிக்க இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் லட்சியத்தோடு வெளியிடப்பட்டுள்ள கல்வி  கொள்கை. நல்ல அம்சங்களை கொண்ட இக்கல்வி கொள்கையால் வருங்கால இளைஞர்கள்  பயன்பெறுவார்கள்.

Tags : education policy leaders , New education policy, leaders, condemnation
× RELATED பீகாரில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு