×

கல்குவாரி லாரி மோதி கூலிதொழிலாளி கால் முறிந்தது: லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

உத்திரமேரூர்:  உத்திரமேரூர் அடுத்த மதுர், பழவேறி, அரும்புலியூர், நெற்குன்றம், பினாயூர், பொற்பந்தல் மற்றும் சுற்றியுள்ள மலை பகுதிகளில் பல்வேறு கல்குவாரிகள், கிரஷர்கள் இயங்குகின்றன. இங்கிருந்து நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் திருமுக்கூடல், பழையசீவரம் சாலை வழியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. கல்குவாரிகளுக்கு செல்லும் கனரக வாகனங்களால், சாலைகள் பழுதாவதுடன், கிராம மக்கள்  சாலையை கடக்கும்போது, விபத்தில் சிக்குகின்றனர். இதனால், படுகாயம் அடைவதோடு, உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகின்றன.

இந்நிலையில் திருமுக்கூடல் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (45). விவசாய கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு மனோகரன், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வாலாஜாபாதில் இருந்து பழைய சீவரம் வழியாக  திருமுக்கூடல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில், மதூர்  கிராமத்தில் இயங்கும் கல்குவாரியில் இருந்து ஒரு லாரி ஒன்று திருமுக்கூடல் நோக்கி அதிவேகமாக சென்றது. அப்போது எதிரே வந்த மனோகரன் பைக் மீது, லாரி பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு, வலது கால் முறிந்தது.

இதை கண்டதும், அப்பகுதி மக்கள், படுகாயமடைந்த மனோகரனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், கல்குவாரி லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், திருமுக்கூடல் -  பழையசீவரம் சாலையில் கிராமத்துக்கு கல்குவாரி லாரிகள் வர கூடாது என கோஷமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சாலவாக்கம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அப்போது, இதுபோன்ற சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பின்னர், கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Tags : Calcutta ,road ,blockade , Calcutta, truck collision, mercenary, leg broken, public road block
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...