×

சமதா கட்சி முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லிக்கு 4 ஆண்டுகள் சிறை: ராணுவ ஊழல் வழக்கில் தீர்ப்பு

புதுடெல்லி: பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான ஊழல் வழக்கில் சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மத்தியில் கடந்த 1998 - 2001 வரை வாஜ்பாய் தலைமையிலான பாஜ கூட்டணி  ஆட்சியில், ஜார்ஜ் பெர்ணான்டஸ் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது, இந்திய ராணுவத்திடம் இருந்து கையடக்க வெப்பநிலை கண்டறியும் கருவிகள் கொள்முதல் செய்வதற்காக, ‘வெஸ்ட்என்ட் இன்டர்நேஷனல்’ என்ற பெயரில் தெகல்கா பத்திரிகை ஆசிரியர் மேத்யூ சாமுவேலால் போலியாக உருவாக்கப்பட்ட நிறுவனம் முயற்சித்தது.

அப்போது, சமதா கட்சியின் தலைவராக இருந்த ஜெயா ஜெட்லி (78) லஞ்சம் பெற்று கொண்டு இந்நிறுவனத்துக்கு தடையில்லா சான்றிதழ் பெற்று தந்தார். இதில், அவருக்கு ரூ.2 லட்சமும், சுரேந்தர் குமார் சுரேகா மற்றும் அப்போதைய ராணுவ அதிகாரி முர்காய்க்கு தலா ரூ.1 லட்சமும் லஞ்சமாக கொடுக்கப்பட்டது. இந்த லஞ்சத்துக்கான சந்திப்புகளை சமதா கட்சியை சேர்ந்த கோபால் பர்சேவால் ஏற்பாடு செய்து கொடுத்தார். அதற்காக அவரும் கமிஷன் பெற்றார். இந்த ஊழலை தெகல்கா ஆசிரியர் `ஆபரேஷன் வெஸ்ட்என்ட்’ என்ற பெயரில் வீடியோவாக, கடந்த 2001 ஜனவரியில் வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, ஜெயா ஜெட்லி, முர்காய், கோபால் பர்சேவால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. சுரேந்தர் குமார் சுரேகா அப்ரூவராக மாறினார். இந்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கடந்த வாரம் இவர்களை குற்றவாளிகளாக அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. ஜெயா ஜெட்லி, கோபால் பசேர்வால், முர்காய்க்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், மூவருக்கும் தலா ரூ 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


Tags : Jaya Jaitley , Samata Party, former leader Jaya Jaitley, 4 years, imprisonment, military corruption case, verdict
× RELATED நெல்லை மாவட்ட காங்., தலைவர்...