×

அமெரிக்கா - சீனா மோதல் உலகை அச்சுறுத்தும் பனிப்போர் 2.0: உலக தலைவர்கள் கணிப்பு

புதுடெல்லி: வர்த்தக ரீதியாக அண்டை நாடுகளை வளைத்து போடுவது, எல்லை விரிவாக்க பேராசை, தென் சீன கடலில் ஆதிக்கம் செலுத்துவது போன்ற சீனாவின் சமீபகால செயல்கள், அமெரிக்கா - சீனா இடையிலான ‘பனிப்போர் 2.0’-வாக உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் 1980களின் இறுதியில் அமெரிக்கா- சோவியத் ஒன்றியம் ஆகிய இரு வல்லரசு நாடுகளும் தங்கள் செல்வாக்கை நிலைநாட்ட ‘பனிப்போர்’ செய்தன. ஆதரவு நாடுகளின் உதவியுடன் மறைமுகப் போரில் ஈடுபட்டன. இறுதியில் 1991ல் சோவியத் ஒன்றியம் பொருளாதார ரீிதியாக வீழ்ந்து, சிதறிய பிறகு பனிப்போர் முடிவுக்கு வந்தது. இதனை அரசியல் நிபுணர்கள், ஆய்வாளர்கள் `பனிப்போர் 1.0’ என்று குறிப்பிட்டனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகளை சீனா திருடி வருவதாகவும், இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது. எனவே, சீனா ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதித்தது. சீனாவும் பதிலடியாக அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீதான வரியை உயர்த்தியது. இந்த வர்த்தகப் போர் பிரச்னையால், உலக நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இரு அரசுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண அறிவுறுத்தி வருகின்றன.

இந்நிலையில்தான், இந்தியாவின் லடாக் எல்லையில் ஆக்கிரமிப்பில் சீனா ஈடுபட்டது. மேலும், இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் போன்றவற்றைக்கு சீனா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அதற்காக, அந்த நாடுகளுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. அதே நேரம், லடாக்கில் இந்திய வீரர்கள் 20 பேரை சீன ராணுவம் கொன்றது மட்டுமின்றி, எல்லை விரிவாக்கத்துக்காக அப்பகுதிகளில் படைகளை குவித்து வருகிறது. இதற்கு பதிலடியாக, இந்தியாவும் சளைக்காமல் வீரர்களையும், விமானப்படைகளையும் குவித்து வருகிறது. இந்த இருநாடுகளுக்கு இடையிலான இந்த எல்லைப் பிரச்னை தற்போது, உலகளாவிய பிரச்னையாக மாறி இருப்பதாக உலக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

* ஏற்கனவே, பட்டுப்பாதை திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியாக உலகளவில் சீனா செய்து வரும் ஆதிக்கம்,
* தென் சீன கடல் பகுதிக்கு சொந்தம் கொண்டாடுவது,
* வர்த்தக மோதல்களில் ரவுடித்தனமாக செயல்படுவது,
* ஹாங்காங் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம்,
* உய்குர் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்,
* ஹேக்கர்கள் மூலம் உலக நாடுகளின் முக்கிய ராணுவ, அறிவுசார் தகவல்களை திருடுவது,
* அப்பாவிகள் போர்வையில் ராணுவ வீரர்கள், உளவாளிகளை அனுப்பி உளவு பார்ப்பது.. - இதுபோன்ற சீனாவின் முரட்டுத்தனங்கள், சதிகள் போன்றவை அமெரிக்காவுக்கு ஏற்கனவே எரிச்சலை அளித்து வந்தது. இந்தியாவின் எல்லையில் அது வாலாட்டியதும், சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மற்ற பகுதிகளுக்கும் பரவும் என்பதை அமெரிக்கா மோப்பம் பிடித்துள்ளது. எனவே, முளையிலேயே அதை கிள்ளி எறிவதற்காகவும், சீனாவின் அட்டகாசத்தையும் அடக்கவும் நட்பு நாடுகளின் துணையோடு நாலாபுறமும் அதற்கு முட்டுக்கட்டை போட தொடங்கி இருக்கிறது.

* முதல் கட்டமாக, தென் சீன கடலில் போர்க்கப்பல்களை நிறுத்தி மிரட்டியது.
* கொரோனா வைரஸ் பரப்பியதை மறைத்ததற்காக, பொருளாதார தடைகள் விதிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுத்தது.
* சீன தூதரகத்தை மூட உத்தரவிட்டது.
* ‘இந்தியாவின் மீது கை வைத்தால் அவ்வளவுதான்’ என்று எச்சரித்தது. - அமெரிக்காவின் இந்த செயல்கள் சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி, பதிலடி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. இவ்வாறு வர்த்தக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், ராணுவ பல ரீதியாகவும், உலகளவில் ஆதிக்கம் செலுத்துவதிலும் அமெரிக்கா - சீனா இடையே மோதல் வலுத்து வருகிறது. இதை, ‘பனிப்போர் 2.0’-வாக உலக நாடுகள் பார்க்கத் தொடங்கி இருக்கின்றன. அதோடு, சீனாவின் ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் குரல் கொடுக்கத் துவங்கி இருக்கின்றன. இதன் காரணமாக, எதிர்காலத்தில் உலகளவில் சீனா தனிமைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகி இருக்கின்றன. அதே நேரம், இருநாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர, நடுநிலை நாடுகளின் தலைவர்களும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

* இந்தியாவின் நிலைப்பாடு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளையும் அரவணைத்து செல்ல முதலில் முயன்றார். ஆனால், கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்ததைத் தொடர்ந்து, சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சீனாவின் டிக்டாக், ஷேர் இட் உள்பட 59 செயலிகளுக்கு ஏற்கனவே தடை விதித்த நிலையில், மேலும் 47 செயலிகளுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், சீனா உடனான எல்லை பிரச்னையில் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவு அளித்து வருகிறது. எல்லை பிரச்னையில் சீனாவுக்கு அமெரிக்கா அதிக அழுத்தம் கொடுத்து வருவதை இந்தியா பயன்படுத்தி கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* சீன எல்லையில் மேலும் 35,000 வீரர்கள் குவிப்பு
இந்தியாவின் கடைநிலை எல்லையான தவுலத் பெக் ஓல்டி பகுதியை ஒட்டிய சீன எல்லைக்குட்பட்ட அக்சாய் சின் பகுதியில் சீனா 50,000 வீரர்களை நிறுத்தி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் டி-90 ஏவுகணை டாங்குகள், பீரங்கிகள், 4,000 வீரர்களை நிறுத்தியது. இதனால், இரு நாடுகள் இடையே மீண்டும் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், இந்தியா நேற்று மேலும் 35,000 வீரர்களை எல்லைப் பகுதியில் குவித்துள்ளது. நாட்டு தலைவர்களிடையே பேச்சுவார்த்தையின் மூலம் சமரச தீர்வு காணப்பட்டால் மட்டுமே, இந்த படைகள் திரும்ப பெறப்படாது என்று மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* வா... வந்து பார்...
கிழக்கு லடாக் எல்லை பிரச்னையை தொடர்ந்து சீனாவுக்கு பதிலடி கொடுக்க, இந்திய பெருங்கடல் பகுதியில் போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களை இந்திய ராணுவம் குவித்து வருகிறது. எல்லையி்ல் ஏற்கனவே விமானப்படை, பீிரங்கி படைகள் குவிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் கடற்படையினருடன் இணைந்து இந்திய கடற்படையினர் போர் பயிற்சியில் ஈடுபட்டனர். தென் சீன கடல் பகுதியில் சீனா தனது எல்லையை விரிவாக்கம் செய்ய முயன்று வருகிறது. அதனால் அங்கு அதிகளவில் போர் கப்பல்களை நிறுத்தி உள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், பிராந்திய நாடுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையிலும் அமெரிக்கா ஏராளமான போர் கப்பல்களை தென் சீன கடல் பகுதியில் நிறுத்தி உள்ளது. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கி உள்ளன. இதன் மூலம், இந்தோ-பசிபிக் பிராந்திய கடல் பகுதியில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சீனா இதுவரை 4.0 ரக போர் விமானங்களை கொண்டு இந்தியாவை மிரட்டி வந்தது. ஆனால், இந்திய விமானப்படையில் ரபேல் போர் விமானங்கள் சேர்க்கப்படுவதால் இந்தியாவின் பலம் கூடியுள்ளது. இந்த விமானம், 4.5 தலைமுறையை சேர்ந்தவை.


Tags : conflict ,world ,World leaders ,China ,US ,Cold War , US-China conflict, world-threatening Cold War, 2.0: World Leaders, Prediction
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்