×

கொரோனா வைரசில் இருந்து எய்ட்ஸ் நோயாளிகளை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும்?: மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆலோசனை

* உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும்.
* கண்கள், மூக்கு, வாயை தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

சென்னை: எய்ட்ஸ் நோயாளிகள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது. இது குறித்து மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில்: எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கூட்டு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அதனால் உடலில் சிடி4 எண்ணிக்கையை அதிகப்படுத்துவதன் மூலம் கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும் சீரான உணவு முறை மற்றும் சுடு தண்ணீரை தான் குடிக்க வேண்டும்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை பரிந்துரைப்படி கொரோனா வைரஸ் நோய்க்கு தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயத்தைக் குடிக்க வேண்டும். அதேபோன்று ஏஆர்டி மருத்துவத்தை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும். இதற்கிடையில் வேறு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் மருத்துவர் கூறும் ஆலோசனைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

மேலும் தற்போது ஊரடங்கு நாட்களில் ஏஆர்டி கூட்டு மருந்துகளை, ஏஆர்டி, இணைப்பு ஏஆர்டி மையங்கள் மற்றும் நம்பிக்கை மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். மையத்திற்கு வர இயலாதவர்கள் 1800 419 1800, 1097 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் வீட்டிற்கே வந்து மருந்துகள் வழங்கப்படும். மேலும் எய்ட்ஸ் நோயாளிகள் கொரோனா தொற்றிலிருந்து தங்களை காத்துக் கொள்ள சோப்பை உபயோகித்து அடிக்கடி கைகளை தேய்த்து கழுவ வேண்டும். கண்கள், மூக்கு, வாயை தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இருமல், தும்மல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மேலும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களை பதிவு செய்து உரிய சேவையினை பெற வேண்டும். கூடுதல் விவரங்களை பெறும் வகையில் 104 அல்லது 24 மணி நேர மாநில கட்டுப்பாட்டு அறை எண் 044-29510400, 044-29510500 என்ற தொலைபேசி எண்கள் அல்லது 9444340496, 8754448477  செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : AIDS patients , Corona virus, AIDS patient, how to protect, State AIDS Control Association, advice
× RELATED கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி...