×

அனைத்து மாநில கட்சிகள் விவாதிக்கும் வரை புதிய தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடாது: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு

சென்னை: நாடாளுமன்றம் கூடி கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதி, சமத்துவம் ஆகியவை குறித்து அனைத்து மாநிலக் கட்சிகளும் விவாதிக்கும் வரை புதிய தேசியக் கொள்கை-2020-யை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று திமுக மாவட்ட செயலாளர், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று மாலை காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

* முத்தமிழ் அறிஞர் கலைஞரின் இரண்டாவது நினைவு தினமான வருகிற 7ம் தேதி, நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்றிட இரவு பகல் பாராது; கண் துஞ்சாது; கொரோனா போராளிகள் என்று அழைக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்கள், காவல்துறையினர்,  தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் சிறப்பு செய்வதென்றும், வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு ஆங்காங்கே வறுமையின் கோரப்பிடியில் சிக்கிச் சுழலும் ஏழை எளியவர்களுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

* மத்தியத் தொகுப்பிற்கு தமிழ்நாடு அளிக்கும் மருத்துவக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு உரிமை உண்டு. இடஒதுக்கீடு கோரிக்கை ஆதாரபூர்வமானது என்று, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பினை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். முத்தமிழறிஞர் கலைஞரின் மகத்தான வழியில் நின்று இன்றைக்கு அயராது போராடி இந்த வழக்கில் சமூகநீதிக்கான நீதித் துறையின் உறுதியைப் பெற்றிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்தக் கூட்டம் பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

* மத்திய அரசு, விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய, மின்சார திருத்தச் சட்ட மசோதா 2020, அத்தியாவசிய திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் வழங்கும் வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகிய அவசரச் சட்டங்களை, நாடாளுமன்றம் அமர்வில் இல்லாத நேரத்தில் நிறைவேற்றிய மத்திய அரசுக்கு இந்தக் கூட்டம் கண்டனம் தெரிவிப்பதுடன் எதேச்சதிகார நெடி நிறைந்த இந்தச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மேலும், புதிய சுற்றுச் சூழல் தாக்க வரைவு அறிவிக்கை -2020யை வெளியிட்டு அதன்மீது கருத்துக் கேட்பு என ஒரு கண்துடைப்பு நாடகத்தையும் நடத்த முனைந்திருப்பதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

* மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கை - 2020க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், மும்மொழித் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் கல்விக் கொள்கை, தமிழகத்தில் அறிஞர் அண்ணாவால் அறிமுகம் செய்யப்பட்டு கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடைமுறையில் இருந்துவரும் இருமொழிக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது என்று தெரிவித்து, அந்த மும்மொழித் திட்டத்தை, நிராகரிக்கிறது.ஆகவே, பொதுப்பட்டியலில் உள்ள கல்வி, மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரப்பட வேண்டும் என்ற திமுக கோரிக்கையை இந்தக் கூட்டம் மீண்டும் வலியுறுத்துகிறது. எனவே,  நாடாளுமன்றம் கூடி கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதி, சமத்துவம் ஆகியவை குறித்து அனைத்து மாநிலக் கட்சிகளும் விவாதிக்கும் வரை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள  புதிய தேசியக் கொள்கை-2020யை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று திமுக கேட்டுக் கொள்கிறது.

மத்திய அமைச்சரவையால் கடந்த ஜூலை 29ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை-2020ன் இறுதி வடிவத்தை உடனடியாக மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை என்றும்  அதிமுக அரசு தீர்மானமாக உடனே அறிவித்திட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடைமுறையில் இருந்துவரும் இருமொழிக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது.

Tags : meeting ,state parties ,MK Stalin ,district secretary , All state parties, until discussed, decided on a new national policy, chaired by MK Stalin, at the district secretary's meeting
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...