×

வலங்கைமான் அருகே குடமுருட்டி ஆற்றில் தடுப்பணை உடைந்தது 2,000 ஏக்கர் பாசனம் பாதிக்கும் சூழல்

வலங்கைமான்: வலங்கைமான் அருகே குடமுருட்டி ஆற்றில் தடுப்பணை உடைந்ததால், 2,000 ஏக்கர் பாசனம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த சந்திரசேகரபுரம் பகுதியில் குடமுருட்டி ஆற்றின் பிரிவில் 300 ஏக்கர் பாசன வசதி பெறக்கூடிய பூண்டி வாய்க்கால், 900 ஏக்கர் பாசன வசதி பெறக்கூடிய சந்தன வாய்க்கால் மற்றும் 800 ஏக்கர் பாசன வசதி பெறக்கூடிய தில்லையம்பூர் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் பாசனத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போதிய தண்ணீர் வராத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று குடமுருட்டி ஆற்றின் நடுவே பொதுப்பணித்துறையால் 10 ஆண்டுகளுக்கு முன் தடுப்பு மதகு அமைக்கப்பட்டது. தடுப்பு மதகின் அருகில் உள்ள பூண்டிவாய்க்கால், சந்தன வாய்க்கால், தில்லையம்பூர் வாய்க்கால் ஆகிய தலைப்பு வாய்க்கால்கள் மூலம் சந்திரசேகரபுரம், ஆதிச்சமங்கலம், லாயம், விருப்பாட்சிபுரம், வளையாமாபுரம் மற்றும் தில்லையம்பூர் ஆகிய கிராமத்திற்கு உட்பட்ட நிலபரப்புகள் போதிய பாசன வசதி பெற்று வந்தது. இந்நிலையில் குடருட்டி ஆற்றின் நடுவே 10ஆண்டுகளுக்கு முன் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணையின் தெற்குப்பகுதியில் 5மீட்டர் தூரத்திற்கு நேற்று உடைப்பு ஏற்பட்டது.

ஆற்றில் தற்போது குறைந்த அளவே தண்ணீர் வரும் சூழ்நிலையில் வருகின்ற தண்ணீர் தடுப்பணையின் உடைந்துபோன பகுதி வழியாக வேகமாக வெளியேறி வருகிறது. இதன்காரணமாக 2ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் குடமுருட்டி ஆற்றில் உடைந்த தடுப்பணை அருகே தண்ணீர் தேங்கி பாசனத்திற்கு செல்லும் வகையில் மரம் மற்றும் மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிகமாக தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : dam ,river ,Valangaiman , Valangaiman, the dam on the Kudamurutty river, was broken
× RELATED தென்காசியில் உள்ள அடவி நயினார் அணை,...