×

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 64.4% பேர் குணமடைந்தனர்..சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் தமிழகம் 4வது இ்டம்: மத்திய சுகாதாரத்துறை

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 64.4% பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியில் - 88%, லடாக் 80%, ஹரியானா 78%, அசாம் 76%, தெலுங்கானா 74%, தமிழ்நாடு 74%, குஜராத் 73% பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.21% ஆக உள்ளது. இது உலகின் மிகக்குறைவான ஒன்றாகும் எனவும் கூறியுள்ளது. அதுமட்டுமல்லாது, இந்தியாவில் ஜூலை 30ம் தேதி வரையில் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மத்திய அரசு விரிவான விவரங்களுடன் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் பின்வருமாறு..

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 15,83,792. இதுவரை 10,20,582 பேர் குணமடைந்துள்ள நிலையில், 34,968 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை (ஆக்டிவ் கேஸ்கள்) 5,28,242. நாட்டில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,00,651. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 2,39,755 ஆக உள்ள நிலையில், மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14,463. தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை 1,46,433.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற- ஆக்டிவ் கேஸ்களில் கர்நாடகா 2வது இடத்தில் உள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 1,12,504 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 42,901 பேர் குணமடைந்த நிலையில், 2,147 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது 67,456 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்களில் இந்திய அளவில் 3வது இடத்தில் ஆந்திரா உள்ளது. ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,20,390. இங்கு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 55,406.

ஆந்திராவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,213. ஆந்திராவில் 63,771 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நாட்டின் இதர மாநிலங்களில் ஆக்டிவ் கேஸ்கள் 29 ஆயிரத்துக்கும் கீழே உள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 29,997 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நாட்டில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகம் 2வது இடத்தில் உள்ளது; கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழகம் 4வது இடத்துக்கு நகர்ந்துள்ளது என மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.


Tags : Central Health Department ,Tamil Nadu ,corona virus victims , Corona, Treatment, Healing, Tamil Nadu, Central Health Department
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...