×

நாங்க ஒன்னும் சலச்சவங்க இல்லை.. யுஏஇ, சீனாவை தொடர்ந்து செவ்வாய் கிரகத்திற்கு 'விடாமுயற்சி'விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது அமெரிக்கா!!

ஃபுளோரிடா: அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் அமெரிக்காவின் நாசா விண்கலம் பாய்ந்தது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் அமெரிக்கா, ஐரோப்பியா, ரஷியா, இந்தியா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளன. செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா மங்கள்யான் என்ற விண்கலத்தை ஏற்கனவே அனுப்பி ஆய்வு நடத்தி வருகிறது. கடந்த 20-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியது. அதே போன்று கடந்த 23ம் தேதி செவ்வாய் கிரகத்திற்கு சீனா தியான்வென்-1 என்ற விண்கலத்தை ஹைனன் தீவில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து ஏவியது.

அந்த வரிசையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் மூலம் விடாமுயற்சி எனப் பெயரிடப்பட்ட விண்கலம் ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் வியாழக்கிழமை மாலை விண்ணில் ஏவப்பட்டது. 7 மாத பயணத்திற்குப் பிறகு பிப்ரவரியில் செவ்வாயில் தரையிறங்கும் விண்கலத்தில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கோளின் பாறைகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு உட்படுத்தும் திட்டம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விண்கலத்துடன் துளையிடும் இயந்திரம், 23 அதிநவீன கேமராக்கள் மற்றும் இரண்டு மைக்ரோபோன்கள் சேர்க்கப்பட்டுள்ளது.இது  செவ்வாய்க் கோளைக் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற உதவும். செவ்வாய்க் கோளில் உள்ள கார்பன் டை ஆக்சைடை வாயுவை இந்த ரோவர் ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்துடன் 1.8 கி.கி எடையுள்ள சிறிய ஹெலிகாப்டர் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வேற்றுகிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டர் எனும் பெருமையை இது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பூமியைக் காட்டிலும் குறைந்த அழுத்தம் உள்ள செவ்வாய்க் கோளில் ஹெலிகாப்டரைப் பறக்க வைப்பது சவாலான செயல் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனாவைத் தொடர்ந்து இந்த மாதத்தில் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட மூன்றாவது விண்கலம் இதுவாகும்.



Tags : UAE ,China ,Mars ,United States , UAE, China, Mars, 'Perseverance', spacecraft, USA
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...