சந்தன கடத்தல் வீரப்பன் சிறப்பு அதிரடிப்படையில் சிக்கியது எப்படி?: இணைய தொடராக தயாரிக்கிறது சென்னை நிறுவனம்..!!

சென்னை: சந்தன கடத்தல் வீரப்பன் சிறப்பு அதிரடிப்படையில் சிக்கியது எப்படி என்பதை விளக்கும் இணைய தொடரை சென்னையை சேர்ந்த நிறுவனம் தயாரிக்கிறது. சிறப்பு அதிரடிப்படை தலைவராக இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் எழுதிய வீரப்பன் சேஸிங் தி பிரிகெண்ட் என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இணையத் தொடர் தயாராகி வருகிறது. இதனை தெரிவித்துள்ள இ - 4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் புத்தகத்தை படமாக்கும் உரிமையை அதிகாரி விஜயகுமாரிடம் இருந்து பெற்றுவிட்டதாக கூறியுள்ளது.

எனவே இந்த புத்தகத்தின் அம்சங்களை கொண்டு எந்தவொரு இணைய தொடரோ அல்லது திரைப்படமோ தயாரிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வாறு எடுக்கப்பட்டால் அவர்கள் இழப்பீடு தர நேரிடும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து, ஊரடங்கு விதிமுறைகளுக்கு ஏற்ப வீரப்பன் பற்றிய இணைய தொடரின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. ஊரடங்கு முழுமையாக விலக்கி கொள்ளப்பட்ட பிறகு வெளிப்புற படப்பிடிப்பு தொடங்கும் என்று இ - 4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் முகேஷ் மேதா கூறியதாவது, எங்கள் மீது நம்பிக்கை வைத்து, தம்முடைய புத்தகத்தின் அடிப்படையில் திரைப்படம் தயாரிக்க அனுமதி அளித்ததற்காக, தற்போது மத்திய அரசு உள்துறை அமைச்சகத்தில் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் விஜயகுமார் அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் இந்த இணைய தொடரில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள், ஊரடங்கு முடிந்ததும் வெளியிடப்படும் என தெரிவித்திருக்கிறார்.

Related Stories: