×

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 9ம் நூற்றாண்டை சேர்ந்த அரிய பிரதிஹாரா சிவன் சிலை லண்டனில் மீட்பு

டெல்லி: இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 9-ம் நூற்றாண்டை சேர்ந்த அரிய பிரதிஹாரா சிவன் சிலை லண்டனில் மீட்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம், பரோலி நகரில் உள்ள கடேஸ்வர் கோயிலில் இருந்து கடந்த 1998-ம் ஆண்டு இந்த பிரதிஹாரா சிவன் சிலை கொள்ளையடிக்கப்பட்டு, லண்டனுக்குக் கடத்தப்பட்டது. நடராஜர் சதுரா வடிவத்தில், ஜடாமகுடத்தில், திரினேத்திரா கோலத்தில் காட்சியளிக்கும் இந்த சிலை 4 அடி உயரமுள்ளது.

இந்த பிரதிஹாரா சிவன் சிலை லண்டனுக்குக் கடத்தப்பட்டு இருப்பதை கடந்த 2003-ம் ஆண்டுதான் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன்பின் லண்டன் தூதரக அதிகாரிகள், அங்குள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் சிலையைக் கடத்தியவர்கள் குறித்தும், அதை வைத்திருந்த அருங்காட்சியகம் குறித்தும் விசாரணை நடத்தினர். இதையடுத்து, பிரதிஹாரா சிவன் சிலை கடந்த 2005-ம் ஆண்டு பிரிட்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அந்த அருங்காட்சியகத்தைச் சேர்ந்த நபர் தாமாக ஒப்படைத்தார்.

அதன்பின் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்தியத் தொல்லியல்துறை அதிகாரிகள் லண்டன் சென்று அந்தச் சிலையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பிரதிஹாரா சிலை, பரோலியில் உள்ள கடேஸ்வர் கோயிலிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 9-ம் நூற்றாண்டு கால சிலை என்பதை உறுதி செய்தனர். பிரிட்டனிலிருந்து இதற்கு முன் பிரம்மா-பிரம்மானி சிலை கடந்த 2017-ம் ஆண்டு இந்தியா கொண்டுவரப்பட்டது. டெல்லியில் உள்ள புரணா குய்லா அருங்காட்சியகத்தில் இருந்து இந்தச் சிலை கொள்ளையடிக்கப்பட்டது. அதன்பின் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கடந்த 2018-ம் ஆண்டு மீட்கப்பட்டு கடந்த ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

வெண்கலத்தால் செய்யப்பட்ட நவநீத கிருஷ்ணன் சிலை, 2-ம் நூற்றாண்டில் சுண்ணாம்புக் கல்லால் செதுக்கப்பட்ட தூண்வடிவ சிலை ஆகியவை இரண்டும் மீட்கப்பட்டு இந்திய அரசிடம் கடந்த ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ள பிரதிஹாரா சிவன் சிலை இன்று டெல்லியில் இந்தியத் தொல்லியல் துறைக்கு கொண்டுவரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



Tags : Shiva ,India ,London , India, Shiva Statue, Redemption, London
× RELATED தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!