×

5ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் என்ற புதிய கல்விக் கொள்கைக்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு..!!

சென்னை: 5ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் என்ற புதிய கல்விக் கொள்கைக்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கை 2020க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் புதிய கல்விக்கொள்கையின் விரிவான சாரம்சம்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதில் 5ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் என்ற ஒரு அம்சம் இடம்பெற்றிருந்தது. இதற்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.

தாய்மொழியில் கல்வி கட்டாயம் என்ற அறிவிப்பை அனைத்து வகை பள்ளிகளிலும் கட்டாயம் அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டர் பதிவில் தெரிவித்ததாவது, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் என்று நடுவண் அரசு பொதுவாக வரையறுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் அது அனைத்து வகை பள்ளிகளுக்கும் சட்டப்படியும், திட்டப்படியும் கட்டாயம் என்ற உறுதி சொற்களால் உரைக்கப்பட வேண்டுமென்று கல்வி உலகம் கருதுகிறது என குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ச்சியாக தற்போது புதிய கல்வி கொள்கைக்கு கருத்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. திமுக நாடாளுமன்ற எம்.பி.யான கனிமொழியும் 34 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கும் தேசிய கல்வி கொள்கையில் ஆக்கப்பூர்வமாக எதுவும் இல்லை என்று கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Vairamuthu , Poet Vairamuthu ,new education policy,
× RELATED கல்விக் கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்