×

இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகே பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம்!

இம்பால்: மணிப்பூர்-மியான்மர் எல்லை அருகே பயங்கரவாத குழுவினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா-மியான்மர் சர்வதேச எல்லையில்  3 நாட்கள் பணியில் ஈடுபட்டிருந்த அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் 15 பேர், தங்களது நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, மணிப்பூர் மாநிலம் சந்தல் மாவட்டத்தில் மியான்மர் எல்லையை ஒட்டிய  சாஜிக் தம்பிக் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் வீரர்களின் வாகனம் சிக்கியது.  இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த வீரர்கள் சுதாரிப்பதற்குள், அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில், 3 வீரர்கள் உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள லீமகாங்கில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 3 பேர் ஹவில்தார் பிராணே கலிதா, ரைபிள்மேன் ஒய்.எம். கொன்யாக் மற்றும் ரைபிள்மேன் ரத்தன் சலீம் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் இந்தியா-மியான்மர் எல்லையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர். இதற்கிடையில், உள்ளூர் பயங்கரவாத குழுவான மக்கள் விடுதலை முன்னணி இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது.
 

Tags : border ,Terrorist attack ,soldiers ,India ,Myanmar , India, Myanmar border, terrorists, attack, Assam Rifles, martyrdom
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி