×

புதுச்சேரி ரயில்வே கிராசிங்கில் சிக்னல் சீரமைப்பு பணி தீவிரம்: கொட்டும் மழையிலும் ஊழியர்கள் மும்முரம்

புதுச்சேரி: புதுவையில் கொட்டும் மழையிலும் ரயில்வே கிராசிங்கில் சிக்னல், கேட் சீரமைப்பு பணிகளில் ரயில்வே ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.  நாடு முழுவதும் மத்திய அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு காரணமாக ரயில், பஸ் உள்ளிட்ட போக்குவரத்து சேவை முடங்கியது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலத்துக்கு அனுப்பும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதன்பிறகு தமிழகத்தில் இருந்து குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் ரயில் இயக்கப்பட்டது. அதுவும் இம்மாதம் நிறுத்தப்பட்டது.

 இதனிடையே புதுவையில் ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநில பயணிகள் வரத்து அடியோடு குறைந்து விட்டது. இந்த நிலையில் புதுச்சேரியில் 3 மாதங்களாக தினசரி ரயில் சேவை இயக்கப்படாமல் உள்ள நிலையில், தண்டவாளம் பராமரிப்பு பணி அவ்வப்போது நடைபெற்று வருகின்றது.  அதன்படி விழுப்புரம் ரயில்வே கோட்டத்தில் இருந்து புதுச்சேரி வந்திருந்த ரயில்வே பணியாளர்கள், இங்குள்ள ஊழியர்களுடன் இணைந்து ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகளை நேற்று மேற்கொண்டனர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள், ரயில்வே கிராசிங்கில் கேட்டுகளை பராமரித்தல், சிக்னல்கள் பராமரிப்பு, தண்டவாளம் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.  மத்திய அரசு ரயில் சேவை துவக்கம் தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியிடாத நிலையில் எந்த நேரத்தில் உத்தரவு வந்தாலும், தயாராக இருக்கும் வகையில் அவ்வப்போது ரயில்வே ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : railway crossing ,Puducherry , Signal, rain, staff at railway crossing, Pondicherry
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்