×

நங்கப்பட்டி ஊராட்சியில் பள்ளி கட்டிடம் இடியும் அபாயம்: புதிய கட்டிடம் கட்டப்படுமா?

காரைக்குடி: காரைக்குடி அருகே நங்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் முழுவதும் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. மாற்று இடத்தில் பள்ளி கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்குடி அருகே தி.சூரக்குடி ஊராட்சிக்கு உட்பட்டது நங்கப்பட்டி. இங்குள்ள மக்களுக்கு கடந்த 1980ல் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 40 ஆண்டுகள் ஆனதால் கட்டிடம் மிகவும் பழுதடைந்து கட்டிட வெளி, உட்புற சுவர்கள் முழுவதும் விரிசல் அடைந்து காணப்படுகிறது. தவிர கட்டிட மேற்கூரை மற்றும் தரை தளம் தண்ணீர் ஊறி காணப்படுகிறது.

மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே இறங்குகிறது. மிகவும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் என்பதால் அப்பகுதி மக்கள் மாற்று இடத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த பெரியசாமி கூறுகையில், கட்டிட பகுதிகள் சேதமடைந்துள்ளதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமாக உள்ளது. எனவே 5 கிமீ தள்ளி உள்ள கானாடுகாத்தானுக்கு அனுப்புகிறோம். இதற்கு ஆட்டோ கட்டணம் தர முடியவில்லை. விடுமுறை காலத்திலேயே எங்களுக்கு புதிய பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பைபாஸ் சாலை அருகே பள்ளி இருப்பதால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது என்றார்.

சூரக்குடி பழனியப்பன் கூறுகையில், இப்பள்ளிக்கு என விளையாட்டு திடல் இல்லை. இதனால் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் கட்டிடம் கட்ட தேவையான இடம் இருக்கும் பட்சத்தில் பள்ளி திறப்பதற்கு முன் கட்டிடம் கட்டி தர வேண்டும் என்றார். பள்ளத்தூர் கேஎஸ்.ரவி கூறுகையில், கிராம மக்கள் இடத்தை தேர்வு செய்து தந்தால் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ விடம் கூறி தொகுதி வளர்ச்சி நிதியில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட தேவையான நிதி ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

Tags : School building ,building ,collapse ,Nangapatti , Nangapatti Panchayat, School Building
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...