×

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சேலம் கடைவீதியில் அலைமோதும் மக்கள்...!! தனிமனித இடைவெளி இல்லாததால் தொற்று பரவும் அபாயம்!!!

சேலம்:  நாளை வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சேலம் மாவட்டம் முழுவதும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் தனிமனித இடைவெளியானது கேள்விக்குறியாகியுள்ளது. வரலெட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் இந்துக்களின் நோன்பாகும். ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர்.

இந்த பூஜைக்கு முக்கியமானதாக கருதப்படுவது பூக்கள்தான். இதனால் பூ வகைகளை வாங்குவதற்காக இன்றைய தினம் சேலம் நேரு கலையரங்கில் அமைக்கப்பட்டுள்ள பூ சந்தையில் ஏராளமான பொதுமக்கள் கூடியுள்ளனர். சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சின்னக்கடைவீதி அருகாமையில் உள்ள வ.உ.சி மார்க்கெட்டிலிருந்து பூ சந்தையானது, தற்போது நேரு கலையரங்கத்திக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது நேரு கலையரங்கத்தில் கூட்டமானது அதிகளவில் காணப்படுகிறது. மேலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும், முககவசங்களை அணியாமலும் மக்கள் அலட்சியமாக செல்கின்றனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர்களும் பல்வேறு அறிவுரைகளை வழங்கினாலும், பொதுமக்கள் அதனை ஏற்காது, பூக்களை வாங்கும் ஆர்வத்தில் குவிந்து வருகின்றனர்.  ஏற்கனவே கொரோனா பாதிப்பால்தான் கடைவீதியானது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டாலும் மக்கள் அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு தராமல் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா தொற்றானது அதிகளவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் வரலட்சுமி நோம்பை முன்னிட்டு பூக்களின் விலையும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : shopping mall ,Varalakshmi ,Salem , Salem, Varalakshmi fasting
× RELATED லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.!!