×

மலைப்பகுதியில் பலத்த மழை: குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு: சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியது

தென்காசி: குற்றாலத்தில் நேற்று காலை பெய்த மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஊரடங்கு அமலில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.  குற்றாலத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி முதல் நோய்த்தொற்று ஊரடங்கு காரணமாக சுற்றுலாப்பயணிகள் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக இந்த நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் சீசன் துவங்குவதற்கான அறிகுறி தென்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒரு சில தினங்கள் சாரலும் பெய்தது. அதன்பிறகு குற்றாலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் சாரல் எதுவுமில்லை. அருவிகளிலும் தண்ணீர் மிகவும் குறைவாகவே விழுந்தது. சற்று வெயிலும் காணப்பட்டது.

சீசன் சரிவர இல்லாததாலும், சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிக்க அனுமதி இல்லை என்ற காரணத்தாலும் குற்றாலம் கிட்டத்தட்ட வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சிலர் தனியார் எஸ்டேட்டில் உள்ள நீர்நிலைகளில் நீராடி வந்தனர். ஜூன் மாதம் முதல் குற்றாலம், தென்காசி பகுதிகளில் பெய்யவேண்டிய தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால், நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து காணப்பட்டது.  
 இந்நிலையில் நேற்று காலை சுமார் இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது. பகல் முழுவதும் வெயில் இல்லை. இடையிடையே மேற்கு தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மேகக்கூட்டம் திரண்டு சற்று மழை பெய்தது.  இதன் காரணமாக மதியம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதிகளில் தண்ணீர் பரந்து விழுகிறது.

ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்த போதும் நோய்த்தொற்று காலமாக இருப்பதாலும்,  ஊரடங்கு அமலில் இருப்பதாலும் சுற்றுலாபயணிகள் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. மெயினருவி மற்றும் ஐந்தருவியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குற்றாலம் சீசன் வரலாற்றில் இதுபோன்று நான்கு மாதகாலம் குளிக்க அனுமதிக்கப்படாத நிலை இதற்கு முன்னர் இருந்ததில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags : hills ,Courtallam Falls , Hillside, heavy rain, Courtallam Falls
× RELATED பெரும்பாறை மலைப்பகுதியில்...