×

இடியுடன் விடிய விடிய பலத்த மழை: 8,500 ஏக்கர் குறுவை நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது

திருச்சி: டெல்டாவில் இடியுடன் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த 8,500 ஏக்கர் குறுவை நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டு அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது காற்றழுத்தமாக நிலை கொண்டுள்ளதால் 30ம் தேதி வரை தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, டெல்டா மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்தது.

நாகை: நாகை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு இடியுடன் தொடங்கிய மழை நேற்று காலை 7மணி வரை நீடித்தது. இதனால் திருமருகல் ஒன்றியத்தில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்த வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்கதிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். செம்பனார்கோவில் வட்டார பகுதியில் 1000 ஏக்கரில் பம்புசெட் மூலம் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. அறுவடைக்கு வரும் நிலையில் பெய்து வரும் தொடர் மழை விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது. பலத்த மழையால் குறுவை நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மிதப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வேளாண் துறையினர் பாதிக்கப்பட்டுள்ள வயல்களை நேரடியாக பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை வழங்க வேண்டும். மேலும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ள பயிர்களுக்கு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர். திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் பலத்த மழை பெய்ததால், பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தற்போது பருத்தி பயிரை அறுவடை செய்து கொள்முதலுக்கு கொண்டு வரும் நிலையில் மழையால் பருத்தி விவசாயிகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதால் மிகுந்த கவலையில் இருந்து வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி பகுதியில் 7500 ஏக்கரில் விவசாயிகள் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு இடியுடன் கனமழை பெய்தது. இதனால் குறுவை நேரடி விதைப்பு செய்த வயல்கள், சம்பா நேரடி விதைப்பு செய்ய வேண்டிய வயல்களில் மழைநீர் வெள்ள காடாக நிற்பதால் உழவு செய்ய முடியாமலும், சம்பா நேரடி விதைப்பும் செய்ய முடியாமலும், நடவு செய்ய நாற்றும் விட முடியாத சூழ்நிலையில் கவலையுடன் விவசாயிகள் உள்ளனர். திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் கூறுகையில், திருத்துறைப்பூண்டி-முத்துப்பேட்டை பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழையால் சம்பா நேரடி விதைப்பு பணிகள் பெரிதும் பாதிக்கும். புழுதி உழவு செய்த வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

இதனால் மீண்டும் வயல்களில் மழைநீர் வடிந்த அல்லது காய்ந்தபிறகு மீண்டும் புழுதி உழவு செய்துதான் சம்பா நேரடி விதைப்பு செய்ய வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்றார். தஞ்சை: தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது. கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் குறுவை பயிர்களை மழைநீர் சூழ்ந்தது. ஒரு சில வயல்களில் குறுவை பயிர்கள் சாய்ந்தது. கும்பகோணம் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்தது. இதனால் கதிர்கள் வயலில் சரிந்ததால் அறுவடை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

புதுக்கோட்டை: அறந்தாங்கி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பலத்த மழை பெய்ததால் காவிரிபாசனம் மற்றும் மானாவாரி பாசன பகுதிகளில் உள்ள வயல்களில் மழைநீர் தேங்கியது. வயல்களில் ஏற்கனவே நேரடி நெல்விதைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், விவசாயிகள் சம்பா சாகுபடியை தொடங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கல்லணை கால்வாயில் முறைவைத்து காவிரிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பெய்த மழை காவிரி பாசன பகுதிக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதே போல் கரூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் நள்ளிரவு மழை துவங்கியது. 1 மணி நேரம் பலமாக கொட்டியது. சிறிது நேர இடை வெளிக்கு பின் நேற்று காலை தூறல் விழுந்து கொண்டே இருந்தது. டெல்டாவில் பாசன வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால், பெரும்பாலான கிளை வாய்க்கால்களில் தண்ணீர் செல்லவில்லை. இதனால் குறுவை சாகுபடி மேற்கொண்டிருந்த விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

மழை பதிவு
மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நேற்று காலை 7 மணி வரை பெய்த மழை அளவு(மிமீ): அதிகபட்சமாக நாகையில் 50.70, மயிலாடுதுறையில் 28.40, திருவாரூரில் 47.40, குறைந்த பட்சமாக தஞ்சையில் 15, கல்லணையில் 8, திருச்சியில் 10, கரூரில் 4.10 மி.மீ மழை பதிவாகியுள்ளன.

வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு
வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு முதல் காலை வரை கனமழை பெய்துள்ளது. இதனால் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கோடியக்கரை, கடினல்வயல் பகுதிகளில் 10ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் மழைநீரால் சூழ்ந்துள்ளது.இதனால் உப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பணிகள் தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Vidya Vidya ,paddy fields , Heavy rains, low paddy
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை