×

திருவனந்தபுரத்தில் முழு ஊரடங்கு குமரி எல்லையோர சாலைகள் மண்கொட்டி அடைப்பு: 30 கிராமங்கள் துண்டிப்பு

களியக்காவிளை: குமரி  -கேரள இணைப்பு சாலைகளில் மண்குவித்து அடைக்கப்பட்டு  உள்ளதால், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. நாடுமுழுவதும்  கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தற்போது பல்வேறு  தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இருப்பினும் மருத்துவம் மற்றும் இறப்பு  உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியூர்களுக்கு செல்ல இ-பாஸ் வழங்குவது  தொடர்கிறது. இதன்மூலம் குமரி மாவட்டத்தை சேர்ந்த பலர் தினமும்  திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும், பல்வேறு நிகழ்வுகளுக்கும் சென்று  வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் ேகரளாவில்  கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது. இதனால் கேரள அரசு  திருவனந்தபுரம் மாநகராட்சி பகுதியில் முழு ஊரடங்கு அறிவித்தது. இதனால்  குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் எண்ணிக்கை  குறைந்தது. ஆனால் குமரி- கேரள எல்லை பகுதிகள் வழியாக கேரளாவிற்கு செல்லும்  பாதைகளை பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர்.  இந்தநிலையில்  கடந்த ஒரு வாரமாக குமரி- கேரளாவை இணைக்கும் எல்லையோர கிராமங்களில் சாலைகளை மண்ணால் அடைக்கும் பணிகளை  கேரள அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இதனால் எல்லையில் வாழும் பொதுமக்கள்  அங்குமிங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குளப்பாறை, நெட்டா,  புலியூர் சாலை, செறியகொல்லா, கண்ணுமாமூடு, பளுகல், நெடுவான்விளை,  செறுவாரக்கோணம், ஊரம்பு உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மண்போட்டு குவித்து  அடைத்துள்ளனர். மேலும் தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி  உள்ளனர்.  30க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளன.

Tags : border roads ,Thiruvananthapuram Kumari ,villages , Thiruvananthapuram, Full Curfew, Kumari, 30 villages
× RELATED கர்நாடகாவில் இவிஎம் உடைக்கப்பட்ட...