×

பாம்பன் தூக்குப்பாலத்தில் மோதி சிக்கிய படகு மீட்பு

ராமேஸ்வரம்: தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தை சேர்ந்த மீனவர் அந்தோணிராஜ் என்பவருக்குச் சொந்தமான செவுள் வலை ஆழ்கடல் மீன்பிடிப்படகு பாக்ஜலசந்தி கடல் பகுதி வழியாக நேற்று மாலை பாம்பன் வடக்கு கடல் பகுதிக்கு வந்தது. மாலை நேரம் என்பதால் கப்பல் செல்லும்போது திறக்கப்படும் தூக்குப்பாலம் திறக்கப்படவில்லை.  படகில் இருந்த மீனவர்கள் தெற்கே மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு செல்வதற்காக மாலை 6.30 மணியளவில் தூக்குப்பாலத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது படகின் வீல்ஹவுஸ் மேல் பகுதி, தூக்குப்பாலத்தின் இரும்பு கர்டர் மீது மோதி நின்றது. இதனால் படகு தொடர்ந்து செல்ல முடியாமல் நீரோட்டத்தின் போக்கின் கிழக்கு மேற்காக பாலத்தின் கீழ் சிக்கிக்கொண்டது.

படகு பாலத்தில் மோதியதால் பலத்த சப்தமும் அதிர்வும் ஏற்பட்டதை தொடர்ந்து பாலத்தில் பணியில் இருந்து ஊழியர்கள் சம்பவம் குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். தொடர்ந்து படகின் பதிவு விபரம் குறித்து கேட்டறிந்த ஊழியர்கள் சிக்கிய படகை மீட்டு வேறு பகுதிக்கு எடுத்துச் செல்லுமாறு தெரிவித்தனர். மீனவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி படகை ரிவர்ஸ் கியரில் பின்னால் ஓட்டிச்சென்று பாலத்தில் இருந்து மீட்டு வேறு பகுதிக்கு சென்றனர்.


Tags : suspension bridge ,collision ,Pamban , Pamban suspension bridge, boat rescue
× RELATED வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில்...