×

கடலூரில் குணமடைந்ததாக கூறிய கொரோனா நோயாளி திடீர் பலி!: உறவினர்கள் அதிர்ச்சி..!!

கடலூர்: கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை குணமடைந்ததாக கூறி வீட்டிற்கு அனுப்பப்பட்டவர் திடீரென இறந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் கோண்டூர் ஜோதிநகரை சேர்ந்தவர் பாலசந்தர் என்ற 63 வயது முதியவர் உயிரிழந்தவராவார். சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்போது அவருக்கு சிகிச்சை அளிக்க கடலூர் அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வசதி இல்லை என கூறி அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதனை தொடர்ந்து,  நேற்று அந்த முதியவர் கொரோனா நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதாக கூறி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

ஆனால் அவர் மூச்சுத்திணறல் இருப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் அவரை வீட்டிற்கு திரும்புமாறு அங்கிருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லாமல் சொந்த வாகனத்திலேயே நேற்று அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார். இந்த நிலையில், வீட்டிற்கு திரும்பி வந்த சிறிது நேரத்தில் அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் யாரும் வரவில்லை. பின்னர் அவரது உடலை அவரது மகன்களே பாதுகாப்பு உடை அணிந்து அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். அதன் பின்பு சுகாதாரத்துறை வந்து அவரது உடலை அடக்கம் செய்தனர். கொரோனா குணமடைந்ததாக கூறி வீட்டிற்கு அனுப்பப்பட்டவர் திடீரென இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Tags : patient ,Cuddalore ,Corona ,Relatives , Corona patient ,Cuddalore,
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...