×

தங்கக்கடத்தல் வழக்கில், ஐ.ஏ.எஸ் அதிகாரியின் தொடர்பு குறித்து 10 நாட்களில் முடிவெடுக்க சுங்கத்துறை, என்.ஐ.ஏவுக்கு மத்திய உள்துறை அமைச்சம் உத்தரவு!!!

திருவனந்தபுரம்:  கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் தொடர்பு குறித்து 10 நாட்களில் உரிய முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கெடு விதித்து உத்தரவித்துள்ளது. அதாவது கேரள அரசில் உயர் பதவியில் உள்ள சிவசங்கரை, அதிக நாட்கள் சந்தேகத்தின்பேரில் வைத்திருக்கக்கூடாது என்று என்.ஐ.ஏ மற்றும் சுங்கத்துறைக்கு மத்திய அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரள தங்கக்கடத்தல் சம்பவத்தில் முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருப்பதாக ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. இதுதொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் முதல்வரின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கர் அந்த பதிவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், ஐ.டி.துறை செயலாளர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். ஸ்வப்னாவுடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து சுங்க துறையினர் ஏற்கனவே 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இதன்தொடர்ச்சியாக என்.ஐ.ஏ அதிகாரிகளும் 3 முறை விசாரணை நடத்தினர்.

அதாவது முதல் முறை 5 மணி நேரமாகவும், 2வது முறை 9 மணி நேரமாகவும், 3வது முறை 10 மணி நேரமாகவும் இந்த விசாரணையானது நடைபெற்றது. அப்போது ஸ்வப்னாவின் தொடர்பு குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகளும், சுங்கத்துறை அதிகாரிகளும் கேட்டு வந்தனர். இதற்கு பதிலளித்த அவர், ஸ்வப்னா தன்னுடைய உறவினருடைய மனைவி என்பது மட்டுமே தெரியும், வேறு எந்தவிதமான தொடர்பும் கிடையாது என கூறியுள்ளார். இருப்பினும் அதிகாரிகள் அவரை சந்தேகத்தின் அடிப்படையில்தான் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் என்.ஐ.ஏ மற்றும் சுங்கத்துறைக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது ஐ.ஏ.எஸ் அதிகாரி கேரளாவில் உயர் பதவியில் இருப்பவராவார். தற்போது அவர் உயர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும், அவரை சந்தேகத்தின்பேரில் அதிக நாட்கள் வைத்திருக்கக்கூடாது என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், இந்த வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் தொடர்பு குறித்து 10 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்ற உத்தரவையும்  பிறப்பித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து என்.ஐ.ஏ மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் கேரள தலைமை செயலகத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை கோரியுள்ளனர். மற்றொருபுறம், துபாயிலிருந்து தூதரகம் பேரில் வந்த தங்கக்கட்டிகளை ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், மகாராஷ்டிரா மாநிலத்திலும் விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக திருச்சியை சேர்ந்த நகைக்கடை ஒருவருக்கும் தங்கம் வாங்கியதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் திருச்சியை சேர்ந்த 6 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் இவர்கள் யார் என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை. இந்த நிலையில், ஸ்வப்னா கும்பல் சென்னையிலும் தங்கக்கட்டிகளை விற்பனை செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சென்னை சூலை நகரில் 20கிலோ தங்கத்துடன் சுமார் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று வெளிநாட்டை சேர்ந்த 2 பெண்களும் 20கிலோ தங்கத்துடன் பிடிபட்டுள்ளனர். இதனால் பிடிபட்டவர்கள் பின்னால் யார் உள்ளனர் என்பதை அறிய டி.ஆர்.ஐ எனப்படும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் சுங்கத்துறை தகவல்களை கோரியுள்ளனர்.

இதற்கிடையில் ஸ்வப்னாவின் கடத்தல் விவகாரத்தில் மூளையாக செயல்பட்டவர் கே.டி.ரமீஷ் என்பராவார். அதாவது இவர் உதவியுடன் வெளிநாட்டிலிருந்து தங்கக்கட்டிகள் கடத்திவரப்பட்டுள்ளன. மேலும் கோழிக்கோடு விமான நிலையத்தை மையமாக கொண்டு தங்ககடத்தல் நடந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டில் கோழிக்கோடு விமானநிலையத்தில் இதுவரை சுங்கத்துறையால் எவ்வளவு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : smuggling ,NIA ,Union Home Ministry ,IAS officer , gold smuggling, Union Home Ministry , NIA ,IAS officer ,ias sivasankar
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...