×

மாநில அரசுக்கு உள்ள உரிமையை - அதிகாரத்தைப் பறிகொடுத்து கலை மற்றும் அறிவியல் கல்வியை காவிமயமாக்க முயற்சிப்பதா? தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கு உள்ள உரிமையை, அதிகாரத்தைப் பறிகொடுத்து கலை மற்றும் அறிவியல் கல்வியை காவிமயமாக்க முயற்சிப்பதா என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமனம் செய்வதில் வெளிப்படைத்தன்மைக்கு மிகப்பெரிய இரும்புத்திரை அமைத்து விட்டு - துணைவேந்தர் தேர்வு நடைபெற்று வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

இப்பதவிக்கு ‘தேர்வுக்குழு’  அமைப்பதிலேயே மாணவர்கள் நலனில் அக்கறையே இல்லாத பொறியியல் கல்வி பின்புலம் உள்ள டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத் துணைவேந்தரை தலைவராக நியமித்து, தமிழ்நாட்டில் உள்ள கல்வியாளர்கள் எல்லாம் அவமரியாதைக்கும், அவமதிப்பிற்கும் உள்ளாக்கப்பட்டார்கள். அதன்பிறகு இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ள 177 பேரில் உத்தரப்பிரதேசம், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து மட்டும் 30 பேர் விண்ணப்பித்துள்ளதும் - தற்போது அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் 12 பேரை மட்டும் இறுதிக்கட்ட நேர்காணலுக்கு அழைத்து, அந்த நேர்காணலையும் கூட காணொலிக் காட்சி மூலம் நடத்தியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் துணைவேந்தரை தேர்வு செய்யும் பொறுப்பில் டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய துணை வேந்தரை நியமித்தது முதல் கோணல். 177 பேரில் எப்படி 12 பேரை மட்டும் நேர்காணலுக்கு அழைத்தார்கள் என்பது அடுத்தகட்ட இருட்டடிப்பு. அப்படி அழைக்கப்பட்டவர்களிடம் காணொலிக் காட்சி மூலம் “கோவிட்-19” நெருக்கடியிலும் இப்போது நேர்காணல் நடத்தியிருக்கிறார் தேர்வுக் குழுத் தலைவர் என்பது, துவக்கத்திலிருந்து இறுதி வரை ஒட்டுமொத்தமாக மர்மமான நடைமுறை மூலமாகவே துணை வேந்தர் தேர்வு நடைபெறுவதைக் காட்டுகிறது.

வெளிப்படைத்தன்மை இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து நடவடிக்கைகளிலும் திட்டமிட்டு “விடைகொடுக்கப்பட்டு 163 ஆண்டு புகழ்பெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை நியமிக்க அதிமுக அரசும், வேந்தரும் இணைந்து செயல்படுவது மிகுந்த வேதனைக்குரியது. நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? என்பதை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுடன் - பாரம்பரியப் பெருமையுடன் நீண்ட நெடிய காலமாக பின்னிப் பிணைந்துள்ள ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகம்.

அதனால் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு - விண்ணப்பித்தவர்களில் தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த கல்வியாளர் ஒருவரையே துணை வேந்தராக நியமிக்க வேண்டும் என்றும் அதை அதிமுக அரசு உறுதி செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். வேந்தர்தான் நியமிக்கிறார். எங்களுக்கு ஒன்றும் தெரியாது என அண்ணா பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் அமைதி காத்தது போல் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் அமைதி காத்து மாநில அரசுக்கு உள்ள உரிமையை அதிகாரத்தைப் பறிகொடுத்து கலை மற்றும் அறிவியல் கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சிக்கு நிச்சயம் அனுமதித்திடக் கூடாது என்று எச்சரிக்கை செய்திட விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : government ,state government ,Tamil Nadu ,MK Stalin , Is the state government trying to epitomize art and science education by depriving it of its rights and power?
× RELATED பணியிடங்களில் பெண்களை பாதுகாக்கும்...