×

இந்திய விமானப்படைக்கு புதிய உத்வேகம், நம்பிக்கை கம்பீரமாக தரையிறங்கியது ரபேல்: அம்பாலா படை தளத்தில் உற்சாக வரவேற்பு; பிரதமர் மோடி உட்பட தலைவர்கள் வாழ்த்து

அம்பாலா: பிரான்சில் இருந்து 7,000 கிமீ தூரம் பயணித்து வந்த 5 ரபேல் போர் விமானங்கள், அம்பாலா விமானப்படை தளத்தில் கம்பீரமாக,  பத்திரமாக தரையிறங்கின. அவைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான ரபேல் விமானங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59,000 கோடி செலவில் 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க, 4 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில், முதல் விமானம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பிரான்ஸ் அரசு கடந்த ஆண்டு ஒப்படைத்தது.

இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக 5 ரபேல் போர் விமானங்கள் பிரான்சின் போர்டியக்ஸ் நகரில் உள்ள மெரிக்னாக் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை இந்தியா நோக்கி புறப்பட்டன. வானில் 7,000 கிமீ தூரம் பயணித்த இந்த விமானங்கள் நடுவில் ஐக்கிய அரபு எமிரேட்சின் அல்தாப்ரா விமானத்தளத்தில் மட்டுமே ஒருமுறை தரையிறங்கின. நடுவானில் 30,000 அடி உயரத்தில் இந்த விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து நேற்று காலை புறப்பட்ட 5 ரபேல் போர் விமானங்களும் நேற்று பிற்பகலில் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தன.

இந்திய எல்லையில் நுழைந்ததும், விமானப்படையின் 2 சுகோய் 30 எம்கேஐ போர் விமானங்கள் ரபேல் விமானங்களை பாதுகாப்புடன் அழைத்து வந்தன. அதோடு, அரபிக்கடலில் பாதுகாப்பு பணியில் இருந்து ஐஎன்எஸ் கொல்கத்தா போர் கப்பல் தனது ரேடியோ அலைவரிசை மூலம் ரபேலை தொடர்பு கொண்டு வரவேற்றது. பிற்பகல் 2 மணி அளவில் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த விமானங்கள் மாலை 3.26 மணி அளவில் அரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள விமானப்படைத் தளத்தில் கம்பீரமாக, சீறிப்பாய்ந்தபடி ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கின. அப்போது, புதிய விமானங்களுக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து விமானப்படையின் வழக்கமான மரியாதை செய்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

‘பறவைகள் பத்திரமாக தரை இறங்கி விட்டன’ என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல் நபராக டிவிட்டரில் ரபேலை வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ரபேலுக்கு வாழ்த்து தெரிவித்தனர். விமானப் படையின் ‘தங்க அம்புகள்’ என்று அழைக்கப்படும் 17வது விமானப் பிரிவில், இந்த ரபேல் விமானங்கள் இணைக்கப்படுகின்றன. ரபேலின் முதலாவது விமானப்படைப் பிரிவு அம்பாலாவிலும், 2வது படைப்பிரிவு மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிமாரா படைத் தளத்திலும் நிறுவப்பட உள்ளது. தற்போது வந்துள்ள 5 விமானங்களில் 2 விமானங்கள் இரட்டை இருக்கை கொண்டதாகவும், 3 விமானங்கள் ஒற்றை இருக்கையுடனும் உள்ளன.

இதுவரை பிரான்ஸ் நிறுவனம் 10 ரபேல் விமானங்களை ஒப்படைத்துள்ளது. மற்ற 5 விமானங்கள் பிரான்சிலேயே பயிற்சி நோக்கத்திற்காக நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டில் முழுமையாக 36 விமானங்களும் வழங்கப்பட்டு விடும். ரபேலின் வருகை மூலம் இந்திய விமானப்படையின் திறன் பன்மடங்கு அதிகரித்துள்ளது. எல்லையில் சீனா தொடர்ந்து வாலாட்டிக் கொண்டிருப்பதால் விரைவில் ரபேல் விமானங்கள் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. பிரான்ஸ், எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, ரபேலை வைத்துள்ள 4வது நாடாக இந்தியா மாறி உள்ளது.

* 23 ஆண்டுக்கு பிறகு...
இந்திய விமானப்படையில் 23 ஆண்டுக்குப் பிறகு அதிநவீன விமானம் சேர்க்கப்பட்டுள்ளது. கடைசியாக 1997ல் ரஷ்யாவின் சுகோய் ஜெட் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டன. அதன்பிறகு, ரபேல் விமானங்கள் வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மிக்-21 ரக விமானங்கள் விரைவில் விடை பெற உள்ள நிலையில் ரபேல், இந்திய விமானப்படையின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளது.

அம்பாலாவின் சிறப்புகள்
* கடந்த 1948ல் கட்டப்பட்ட அம்பாலா விமானத் படைத்தளம் அதிபாதுகாப்பு மிக்கதாகும்.
* இங்கு 2 ஜாகுவார் போர் விமானப்படைப் பிரிவுகளும், மிக் 21 பைசன் படைப்பிரிவு ஒன்றும் உள்ளது.
* கடந்த 2019, பாகிஸ்தானின் பாலகோட் விமான படை தளத்தில் வான் வழி தாக்குதல் நடத்த மிராஜ் போர் விமானங்கள் இங்கிருந்துதான் புறப்பட்டு சென்றன.
* இந்தியா-  பாகிஸ்தான் எல்லையில் இருந்து 200 கிமீ தொலைவில் இந்த படைத்தளம் அமைந்துள்ளது.
* போர் போன்ற சூழல் ஏற்பட்டால், அம்பாலாவில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் சீனா, பாகிஸ்தான் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த விமான தளங்களை ரபேல் அடைந்து தாக்க முடியும்.
* இங்கு ரபேல் விமானங்களை நிறுத்தவும், அதற்கான கட்டமைப்பு வசதிகள் செய்வதற்காகவும் ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளது.

* போர்க்கப்பலுடன் உரையாடிய ரபேல்
இந்திய வான் எல்லைக்குள் நுழைந்ததும் ஐஎன்எஸ் கொல்கத்தா, ரபேல் இடையே நடந்த உரையாடல் வருமாறு:
ஐஎன்எஸ் கொல்கத்தா: “இந்தியப் பெருங்கடலுக்கு வருக.”
ரபேல் பைலட்: “மிக்க நன்றி. கடலை பாதுகாக்கும் இந்திய போர்க்கப்பல் மிகுந்த உறுதியளிக்கிறது. ”
ஐஎன்எஸ் கொல்கத்தா: “மகிமையுடன் வானைத் தொடுங்கள். மகிழ்ச்சிகரமாக தரையிறங்குங்கள். ”
ரபேல் பைலட்: “வாழ்த்துக்கள். மகிழ்ச்சியான வேட்டை. மேலேயும், வெளியிலும் ” என வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டது.

ரேடாருக்கு சிக்காது
* ரபேலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 2,223 கிமீ.
* இதில், 9,500 கிலோ எடையுள்ள ஆயுதங்களை எடுத்துச் செல்ல முடியும்.
* இதன் மொத்த நீளம் 10.3 மீ.
* ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கிமீ வரை பறக்கக் கூடியது.
* இதனால், எதிரிகளை இலக்குகளை தகர்த்து விட்டு மிக எளிதாக திரும்பி விடும்.
* இரட்டை இன்ஜின் கொண்ட ரபேல் போர் விமானங்கள் போர்க்கப்பல்களில் எளிதாக தரையிறக்க முடியும்.
* ரபேல் எதிரியின் ரேடார் கண்களுக்கு புலப்படாது
* உளவு பார்த்தல், வான்வெளி பாதுகாப்பு, ஊடுருவி தாக்குதல், அணு ஆயுத திறன், எதிரி போர்க்கப்பல்களை தாக்கும் திறன் உள்ளிட்ட அனைத்து விதமான போர் நடவடிக்கைகளையும் ரபேலால் மேற்கொள்ள முடியும்.
* இஸ்ரேல் ஹெல்மெட் மவுன்டட் லைட், ரேடார் எச்சரிக்கை கருவிகள், பறத்தல் தொடர்பான விவரங்களை 10 மணி நேரம் வரை சேமித்து வைக்கும் வசதி, ஜாமர்கள், இன்ப்ரா ரெட் டிராக் சிஸ்டம்ஸ், மலைப் பிரதேசங்களில் இயக்கப்படுவதற்கான கோல்டு இன்ஜின் ஸ்டார்ட் வசதி, தாக்க வரும் ஏவுகணைகளில் இருந்து தப்பிக்கும் வசதி உள்ளிட்டவை ரபேலில் உள்ளன.
* சீனாவின் உள்நாட்டு தயாரிப்பான 5ம் தலைமுறை ஜெ-20 போர் விமானங்களை காட்டிலும் ரபேல் திறன்மிக்கது. சீனா தனது விமானப்படையில் ஜெ20 விமானங்களை விரைவில் இணைக்க உள்ளது.

* பலத்த பாதுகாப்பு
ரபேல் விமானங்கள் வருவதையொட்டி, அரியானா மாநிலம் அம்பாலா விமானப்படைத் தளத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விமான தளம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். விமான தளத்தின் சுற்றுச்சுவரையோ, விமானங்களையோ பொதுமக்கள் யாரும் புகைப்படம் எடுக்கக் கூடாது, வீடியோ எடுக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், விமானதளத்தை சுற்றி 3 கிமீ தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. விமான தளத்தை சுற்றிய பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து முழு சோதனையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் யாரும் வீட்டின் மாடியில் இருந்தபடி விமானங்களை புகைப்படம் எடுக்கக் கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவித்த வண்ணம் இருந்தது.

* சமஸ்கிருதத்தில் வரவேற்பு
ரபேல் விமானத்தை வரவேற்று பிரதமர் மோடி டிவிட்டரில் சமஸ்கிருத மொழியில் டிவிட் செய்தார். அதில் அவர், ‘தேசத்தைப் பாதுகாப்பதை விட பெரிய ஆசீர்வாதம் எதுவுமில்லை, தேசத்தைப் பாதுகாப்பதை விட ஒரு நல்ல செயல் வேறு எதுவுமில்லை. தேசத்தைப் பாதுகாப்பதே சிறந்த யாகம். இதைத் தாண்டி எதுவும் இல்லை. மகிமையுடன் வானத்தைத் தொடுங்கள். வரவேற்கிறேன் ரபேலை...’ என கூறி உள்ளார். மேலும் அவர், ‘‘நமது ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் தொடங்கி விட்டது. பல்திறன் கொண்ட ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் புரட்சியை ஏற்படுத்தும்,’’ என்றார்.

* ஈரான் ஏவுகணை சோதனையால் பரபரப்பு
ஐக்கிய அரபு எமிரேட்சின் அல் தாப்ரா விமான தளத்தில் ரபேல் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கும், ஈரானுக்கும் இடைப்பட்ட ஹர்முஷ் ஜலசந்தியில் ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணை சோதனை நடத்தியது. ‘டம்மி’ விமானத் தாங்கி போர் கப்பலை குறிவைத்து ஈரான் ஏவுகணைகள் ஏவி சோதனை செய்யப்பட்டன. இந்த ஏவுகணை சோதனை அமெரிக்க படைகளை மிரட்டவே நடத்தப்பட்டது என்றாலும், அல் தாப்ரா விமான தளத்தில் ரபேல் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த சமயத்தில் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : leaders ,Modi ,Indian Air Force ,Raphael ,Ambala Air Force , Indian Air Force, New Inspiration, Hope, Landing Rafael, Ambala Force Base, Enthusiastic Welcome, Prime Minister Modi
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமண...