×

தங்கம் கடத்தல் வழக்கு சொப்னா விரித்த வலையில் சிவசங்கர் சிக்கியது எப்படி?: 24.30 மணி நேரம் விசாரணையில் திடுக் தகவல்கள்

திருவனந்தபுரம்: ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கு தொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயனின்  முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரையும் என்ஐஏ விசாரித்தது. 3 நாட்களில் 24.30 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்துள்ளது. இதில் முக்கிய தகவல்கள் கிடைத்தாலும் தீவிரவாத குழுக்களுடன் சிவசங்கரை  தொடர்பு படுத்துவதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. ஆகவே, 3 முறை விசாரித்த பிறகு என்ஐஏ விடுவித்துள்ளது. அதேநேரம் உயர் பதவியை பயன்படுத்தி ஊழல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

மேலும், அரசு திட்டங்களுக்கு ஆலோசனை வழங்க சில நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. இவை அனைத்துமே சிவசங்கரின் நேரடி மேற்பார்வையில், அவர் கூறும் நிறுவனங்களுக்கு மட்டுமே  வழங்கப்பட்டிருந்தன. இதில்  பெருமளவில் ஊழல் நடந்திருக்கலாம் என்று என்ஐஏ கருதுகிறது. இதையடுத்து, சட்ட ஆலோசனைக்கு பின்னர் சிவசங்கர் வழக்கை மட்டும் சிபிஐயிடம் ஒப்படைப்பது குறித்து என்ஐஏ ஆலோசித்து வருகிறது. என்ஐஏ  இதுவரை சிவசங்கருக்கு நற்சான்று வழங்கவில்லை. சொப்னா கும்பலிடம் இருந்து கிடைத்த விவரங்கள், இந்த வழக்கில் 5வது முக்கிய நபரான ரமீஸிடம் இருந்து கிடைக்கும் விபரங்களை வைத்து மீண்டும் அவரை விசாரிக்க தீர்மானித்துள்ளது. மேலும், தலைமை செயலக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் இன்னும் என்ஐஏவுக்கு கிடைக்கவில்லை. இதில் பல முக்கிய தடயங்கள் கிடைக்கலாம் என்று என்ஐஏ கருதுகிறது.

சொப்னா கும்பல் சிவசங்கரின் பலவீனங்களை தெரிந்து கொண்டு, அதை பயன்படுத்தி சதியில் சிக்க வைத்ததாக தெரிகிறது. இதை சிவசங்கரும் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். சிவசங்கருக்கு மது பழக்கம் உண்டு. அவரை தங்கள் வலையில் சிக்க வைக்க சொப்னா கும்பல் அடிக்கடி மது விருந்து நடத்தியுள்ளனர்.  அப்போது மதுவுடன் போதை மருந்தும் கலந்து கொடுத்திருக்கலாம் என என்ஐஏவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மது விருந்துகளில் நடந்த சம்பவங்கள்  குறித்து தனக்கு அதிகமாக ஞாபகம் இல்லை என சிவசங்கர் கூறியுள்ளார்.

சிவசங்கரிடம் இருந்து கிடைத்த  விபரங்களை வைத்து சொப்னா, சரித்குமார், சந்தீப் குமாரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ தீர்மானித்துள்ளது. சிவசங்கர் கூறியவற்றை என்ஐஏ முழுமையாக நம்பவில்லை. அதனால், எந்த நேரத்திலும் சிவசங்கரிடம் மீண்டும் விசாரணை நடக்கும் என தெரிகிறது. இந்த  வழக்கில் முக்கிய நபரான ரமீஸ்தான், கடத்திய தங்கத்தை தீவிரவாத கும்பல்களுக்கு கொடுத்திருக்கலாம் என என்ஐஏ கருதுகிறது. அவரை என்ஐஏ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இவருக்கு சர்வதேச தீவிரவாத கும்பல்களுடன் தொடர்பு  இருப்பதாக என்ஐஏவுக்கு தகவல்  கிடைத்துள்ளது. விசாரணையில்  இவரிடம் இருந்து மேலும் பல முக்கிய  விபரங்கள் கிடைக்கலாம்.

* ஜாமீன் மனு விசாரணை
சொப்னா, சந்தீப் நாயர் ஜாமீன் கோரி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு மீது நேற்று விசாரணை நடந்தது. இதை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், விசாரணையை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கில் தீவிரவாத கும்பலுக்கு இருக்கும் தொடர்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, என்ஐஏவுக்கும் உத்தரவிட்டார். இந்நிலையில், போலி பட்டப்படிப்பு சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்ததாக கூறப்படும் வழக்கில், சொப்னாவை கைது செய்து விசாரிக்க, போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

* சூடு பிடிக்கும் துப்பாக்கி கடத்தல் வழக்கு
தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய ரமீஸ், கடந்த ஆண்டு நவம்பரில் துபாயில் இருந்து கடத்தி வந்த 13 துப்பாக்கிகள் சுங்க இலாகா சோதனையில் சிக்கியது. இவை துப்பாக்கி சுடும் பயற்சி மையத்துக்கு பயன்படும் ஏர்-கன் வகையை சேர்ந்தவை எனவும், பாலக்காட்டில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்துக்காக கொண்டு வந்ததாகவும் ரமீஸ் அப்போது தெரிவித்தார். ஆனால், இதை பயிற்சி மையத்தினர் மறுத்தனர். இதையடுத்து ரமீஸ் மீது சுங்க  இலாகா வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு பின்னர் நெடும்பாசேரி போலீசுக்கு மாற்றப்பட்டு துப்பாக்கிகளும் ஒப்படைக்கப்பட்டன. அவை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டன. 8 மாதங்களாக இந்த வழக்கில் போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை. தற்போது, இந்த வழக்கையும் மீண்டும் விசாரிக்க சுங்க இலாகா நடவடிக்கை எடுத்து வருகிறது.

Tags : Sopna ,trial , Gold smuggling case, Sopna spread web, Sivashankar, 24.30 hours investigation, startling information
× RELATED பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை