×

அதிகரிக்கும் காற்று மாசுவால் அபாயம் 24.8 கோடி வடமாநில மக்களின் ஆயுளில் 8 ஆண்டு குறைகிறது: இந்தியாவில் சராசரியாக 5.2 ஆண்டுகள் அவுட்

புதுடெல்லி:  காற்று மாசு காரணமாக வட மாநில மக்களின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் வரை குறைவதாகவும், இந்தியாவில் சராசரியாக இந்தியர்களின் ஆயுட்காலத்தில் 5.2 ஆண்டுகள் குறைவதாகவும் ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக் கழகத்தில் உள்ள ‘எரிசக்தி கொள்கை அமைப்பு’ காற்றின் தர ஆயுள் குறியீடு குறித்து புதிய பகுப்பாய்வை மேற்கொண்டது.

இந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
1 இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி காற்று மாசுபாட்டை குறைத்தால் மக்களின் ஆயுட்காலமானது 5.2 ஆண்டுகள் அதிகரிக்கும். ஆனால், இந்தியாவில் காற்றில் நுண்துகள் மாசுபாடு வேகமாக அதிகரித்து வருகிறது.
2 கடந்த 1998ம் ஆண்டு முதல் நாட்டில் சராசரியாக காற்றில் உள்ள நுண்துகள் மாசுவின் அளவு 42 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், இப்பகுதிகளில் வசிப்பவர்களின் சராசரி ஆயுட்காலம், 1.8 ஆண்டுகள் குறைவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
3 வட இந்தியாவில் தற்போதைய காற்று மாசு தொடர்ந்தால் அங்கு வசிக்கும் 24.8 கோடி மக்களின் சராசரி ஆயுட்காலம், 8 ஆண்டுகளுக்கும் அதிகமாக குறையக்கூடும்.
4உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ நகரம் மிகவும் அதிக அளவிலான காற்று மாசினை கொண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலோடு ஒப்பிடும்போது, இங்கு 11 சதவீதம் காற்று மாசு அதிகமாக காணப்படுகிறது. இங்கும் இதே நிலை தொடர்ந்தால் மக்கள் ஆயுட்காலத்தில் 10.3 ஆண்டுகள் குறையும் அபாயம் உள்ளது.

5 டெல்லியில் உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி காற்று மாசு குறைக்கப்பட்டால் அங்கு வசிக்கும் மக்களின் ஆயுட்காலத்தில் 9.4 ஆண்டுகள் கூடுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளது.
6 அதேபோல், இந்தியாவின் தேசிய தரத்தை கடைப்பிடித்தால் 6.5 ஆண்டுகள் ஆயுட்காலத்தில் கூடுதலாகும்.
7 பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலை பின்பற்றி காற்று மாசுவை குறைத்தால் மக்களின் ஆயுட்காலத்தில் 7 ஆண்டுகள் கூடுதலாகும்.
8 அரியானாவில் காற்று மாசு குறைக்கப்பட்டால் மக்கள் சராசரி வயதுடன் 8 ஆண்டுகள் கூடுதலாக வாழ முடியும்.

9 உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் தொகையை கொண்ட வங்கதேசம், இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை காற்று மாசுவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கு ஆசியாவின் மிகவும் மாசுபட்ட பகுதியாக வட இந்தியா  இருக்கிறது.
10  கடந்த 20 ஆண்டுகளில் தொழில்மயமாக்கல், பொருளாதார வளர்ச்சி, மக்கள் தொகை வளர்ச்சி ஆகியவவை நாடுகளின் எரிசக்தி தேவையை அதிகரிக்க வழிவகுத்தன. பாகிஸ்தான், இந்தியாவில் சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை 2000ம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தை காட்டிலும் 4 மடங்காக அதிகரித்துள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் நான்கில் ஒரு பகுதி மக்கள், உலகின் வேறு எந்த நாட்டிலும் காணப்படாத அளவுக்கு
காற்றுமாசு காரணமாக பாதிக்கப்படுகின்றனர்

* 4 நாடுகளில் 3 மடங்கு உயர்வு
வங்கதேசம், இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் நிலக்கரியில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, கடந்த 1998ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவும், செங்கல் சூளைகள், பயிர்க்கழிவுகளை எரித்தல் போன்ற நடவடிக்கைகளாலும் காற்று மாசு அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

* 100.4 கோடி இந்தியர்கள்
இந்தியாவில் 100.4 கோடி மக்கள், உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ள காற்று மாசுவின் அளவை விட கூடுதலாக உள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர். இது, நாட்டின் மொத்த தொகையில் 84 சதவீதமாகும்.

Tags : India ,North ,northerners , Rising air pollution, 24.8 crore, reduces the life expectancy of people in the North by 8 years
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...