×

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இஎஸ்ஐ சட்டம் பொருந்தும்: ஐகோர்ட் பெண்கள் நீதிபதி அமர்வு தீர்ப்பு

சென்னை: தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீட்டு சட்டம் (இ.எஸ்.ஐ) பொருந்தும் என்று சென்னை உயர் நீதிமன்ற 3 பெண் நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. கல்வி நிறுவனங்களுக்கும் இஎஸ்ஐ சட்டம் பொருந்தும் என கூறி, தமிழக அரசு 2010ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. அதை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்களின் சார்பில் பல வழக்குகள் தொடரப்பட்டன. வழக்குகளை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, ‘ஏற்கனவே இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், தற்போது தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த கூடாது’ என்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால், கேரள உயர் நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள்காட்டி, தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த அமர்வு, வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியதால், இஎஸ்ஐ சட்டம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்துமா என்பன உள்ளிட்ட சட்ட கேள்விகளுக்கு பதில் காணும் வகையில், இந்த வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்து தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவிட்டார். இதன்படி, சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக 3 பெண் நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, அனிதா சுமந்த், பி.டி.ஆஷா அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், இ.எஸ்.ஐ. சார்பில் மூத்த வக்கீல் எஸ்.ரவீந்திரன், மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் கே.எம்.விஜயன், சேவியர் அருள்ராஜ், வக்கீல் விஜய் ஆனந்த் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர். மூத்த வக்கீல் விஜயன் வாதிடும்போது, ‘‘கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலையா, இல்லையா என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியாது’’ என்று வாதிட்டார்.  

அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘‘கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலையா, இல்லையா என்பது மட்டுமல்லாமல் பல சட்ட கேள்விகள் இந்த வழக்கில் எழுப்பப்பட்டுள்ளது’’ என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ சட்டம் பொருந்தும் என்றும், இதுதொடர்பான அரசாணை செல்லும் என்றும் தீர்ப்பு அளித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக மனுதாரர்களில் ஒருவரான அகில இந்திய தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.பழனியப்பன் கூறினார்.


Tags : institutions , Private Educational Institution, ESI Law Applicable, Icord Women, Judge Session, Judgment
× RELATED அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள FPI...