×

தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறி சாலையில் ஆறாக வழிந்தோடும் கழிவுநீர்: தொற்று நோய் பரவும் அபாயம்

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் வைப்பூர் ஊராட்சி காரணித்தாங்கல் பகுதியில் தனியார் அடிக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் ஆறு போல் வழிந்தோடுகிறது. மேலும் சாலையில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில், குட்டைபோல் கழிவுநீர் தேங்குவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் துர்நாற்றத்தால் சிரமம் அடைகின்றனர். மாதக்கணக்கில் கழிவுநீர் சாலையில் தேங்கி கிடப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுலகத்தில் பலமுறை புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குன்றத்தூர் ஒன்றியம் வைப்பூர் ஊராட்சி காரணித்தாங்கல் கிராமத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர். சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றபடுகிறது. இந்த கழிவுநீர் முறையாக செல்ல காவல்வாய் வசதி இல்லாமல், வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் திறந்துவிடப்பட்டு, குட்டை போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது.இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைவதுடன், மாதக்கணக்கில் கழிவுநீர் சாலையில் தேங்கி கிடப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து, குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனை கண்டித்து, சாலை மறியல் போராட்டம் நடத்தி, அரசுக்கு கவன ஈர்ப்பு கொண்டு வரபட்டது. ஆனால், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்திடம், அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு அலட்சியப்போக்காக நடந்துகொள்கின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக, மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து, அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : apartment ,road ,dirt road , Private apartment, exit, road, sewer
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...