அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படவுள்ள நிலையில் டிக்டாக் பிரபலங்களை அழைக்கும் பேஸ்புக் நிறுவனம்..!!

வாஷிங்டன்: இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படவுள்ள நிலையில், டிக்டோக் பொழுதுபோக்கு செயலியில் பிரபலமாக இருக்கும் நபர்களுக்கு நிதியுதவி அளித்து தனது புதிய ரீல்ஸ் (Reels) செயலியில் இணைய பேஸ்புக் அழைப்பு விடுத்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலை தொடர்ந்து இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்த டிக்டோக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது.

இதனையடுத்து பேஸ்புக் நிறுவனம், உடனடியாக இந்தியாவில் இன்ஸ்டாகிராம் உடன் ரீல்ஸ் சேவையை துவங்கியது. பிரேசில், ஜெர்மனி, பிரான்ஸை தொடர்ந்து 4-வது நாடாக ரீல்ஸ் சேவையில் இந்தியா இணைந்தது. டிக்டோக் செயலிக்கு மாற்றாக கருதப்படும் ரீல்ஸில் 15 நொடிகள் வீடியோவை பயனர்கள் பல்வேறு அம்சங்களை பயன்படுத்தி பதிவேற்ற இயலும். இந்நிலையில், அமெரிக்காவில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தனது வீடியோ மேக்கிங் செயலியான ரீல்ஸ் ஆப்பை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

இதனை பிரபலப்படுத்தும் வகையில், சீன செயலியான டிக்டோக்கில் மில்லியன் கணக்கில் பாலோயர்களை கொண்டு பிரபலமானவர்களை ரீல்ஸ் ஆப்பில் வீடியோ பதிவிட வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. பிரத்யேகமாக வீடியோ வழங்குவதற்காக படைப்பாளிகளுக்கு அதிக பணத்தை அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வளர்ந்து வரும் படைப்பாளிகளை வெளியே கொண்டுவருவதிலும், இன்ஸ்டாகிராமில் புதிய நட்சத்திரங்களை உருவாக்க உழைப்பதிலும் எங்களுக்கு நீண்ட வரலாறு உள்ளது என்று பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் போர்ப்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நிதியுதவியை பெறுவதற்கு, படைப்பாளிகள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் பாலோயர்களை வைத்திருப்பதுடன், டிக்டோக் விதிகளை பின்பற்றி தொடர்ச்சியாக வீடியோக்களை பதிவிட்டு வர வேண்டும். அடுத்த மாதம் முதல் அமெரிக்க படைப்பாளிகளின் விண்ணப்பங்களை அனுமதிக்க இருப்பதாக டிக்டோக் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அடுத்த 3 மாதங்களில், அமெரிக்காவில் 10 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.

Related Stories:

>