×

உலகின் மொத்த எண்ணிக்கையில் 70% புலிகள் இந்தியாவில் இருக்கு..! மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். உலக புலிகள் தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அப்போது அவர், ‘1973ம் ஆண்டு இந்தியாவில் 9 புலிகள் காப்பகம் இருந்தது. தற்போது 50 புலிகள் காப்பகங்கள் இருக்கின்றன. உலகில் 13 நாடுகளில் மட்டுமே தற்போது புலிகள் காணப்படுகின்றன. இந்த நாடுகளில் புலிகளைப் பாதுகாக்க முன்வரும் மக்களுக்கு பயிற்சி அளிக்க இந்தியா தயாராக இருக்கிறது.

உலக அளவில் இருக்கும் புலிகளில் இந்தியாவில் 70 சதவீதப் புலிகள் உள்ளது’ என்றார். புலிகள் கணக்கெடுப்பு என்பது 4 ஆண்டுக்கு ஒருமுறை மத்திய அரசால் மேற்கொள்ளப்படும். அதன்படி, இப்போது சுமார் 3 ஆயிரம் புலிகள் வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கணக்கெடுப்பு 2022ம் ஆண்டு நடத்தப்படும் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை நீலகிரி மாவட்டத்தில் 321 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் முதுமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது. தற்போது 367 கி.மீ வரை புலிகள் நடமாட்டம் உள்ளது. தமிழகத்தில் ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம், களக்காடு முண்டந்துறை என 4 புலிகள் காப்பகங்கள் உள்ளன.

கேரளாவில் பெரியார் மற்றும் பரம்பிக்குளம் புலிகள் காப்பங்களும், கர்நாடகாவில் பந்திப்பூர், பத்ரா, தந்தேலி அன்ஷி, பிலிகிரி ரங்கநாதா கோவில், மற்றும் நாகர்ஹோலே பகுதிகளில் புலிகள் காப்பகங்கள் இயங்கி வருகிறது. கடந்த 2006 முதல் 2014 வரையான காலகட்டத்தில் புலிகளின் எண்ணிக்கை வளர்ச்சி பாதையை நோக்கி இருந்தாலும் 2018 கணக்கெடுப்பு புலிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கர்நாடகாவின் நாகராஹோலே, பந்திப்பூர், தமிழகத்தின் முதுமலை, சத்தியமங்கலம், மற்றும் கேரளத்தின் வயநாடு பகுதிகளில் தற்போது இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 724 ஆக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Tags : world ,India , Tigers, India, Union Minister
× RELATED 70 சதவிகிதம் மக்களை கொரோனா தாக்கும்…