×

ஊரடங்கால் விலை போகாத கொய்யா: விவசாயிகள் கவலை

ஒட்டன்சத்திரம்: ஊரடங்கு காரணமாக ஒட்டன்சத்திரம் பகுதியில் விளையும் கொய்யாப்பழங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாசரிப்பட்டி, வேலூர், அன்னப்பட்டி, சிந்தலவாடம்பட்டி, ராமபட்டினம்புதூர், விருப்பாச்சி, சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கொய்யா நடவு செய்துள்ளனர். கொய்யா வருடம் முழுவதும் விளைச்சல் தரும் ஒரு பயிராகும். ஆனால் கடந்த 4 மாதங்களாக போக்குவரத்து தடைபட்டுள்ளதால் அறுவடை செய்த கொய்யாப்பழங்களை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் அவற்றின் விலை சரிந்துள்ளது.

ஊரடங்குக்கு முன்பு 23 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி கொய்யாப்பழம் ரூ.900 முதல் ரூ.1000 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்பொழுது ஊரடங்கு காரணமாக பொதுமக்களிடம் நுகர்வு குறைவாக இருப்பதால், விலை குறைத்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பெட்டி கொய்யாப்பழம் ரூ.250 முதல் ரூ.300 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக கொய்யா விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து கொய்யா வியாபாரி யாசர் அராபத் கூறுகையில், ‘‘சத்திரப்பட்டி பகுதியில் அறுவடை செய்யப்படும் கொய்யாப்பழங்கள் பிற மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. விற்பனை சரிந்துள்ளதால் விவசாயிகளின் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Curry , Curry, guava, farmers worry
× RELATED பள்ளிபாளையம் காளான் பிரை