×

நோபல் பரிசு வென்றவர்களில் 90 சதவீதம் பேர் தாய்மொழியில் கல்வி கற்றவர்களே: துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு

ஹைதராபாத்: ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த, அறிவு உருவாக்கம்: தாய்மொழி என்ற தலைப்பிலான வலையரங்கத்தை துவக்கி வைத்துப் பேசிய வெங்கையா நாயுடு, ஒவ்வொரு மாநில அரசும் அந்தந்த அலுவலக மொழிக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

கல்வியிலிருந்து நிர்வாகம் வரை பல்வேறு துறைகளில் தாய்மொழியைப் பயன்படுத்துவதன் வாயிலாக, பல்வேறு இந்திய மொழிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார். இசை, நடனம், பழக்கவழக்கங்கள், திருவிழாக்கள், பாரம்பரிய அறிவு ஆகியவற்றைப் பாதுகாப்பதில் மொழி முக்கியப் பங்கு வகிப்பதாகவும் கூறினார்.

துவக்கப் பள்ளி வரை தாய்மொழியில் கல்வி கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய துணை குடியரசுத் தலைவர், பரவலாகப் பயன்படுத்துவதன் மூலம்தான் மொழியானது பிரபலமடையும் என்றார். ஆங்கிலத்தில் கல்வி கற்றால்தான் முன்னேற்றமடைய முடியும் என்பது வெறும் கற்பிதமே என்று தெரிவித்த அவர், தாய்மொழியில் சிறந்து விளங்குபவர்களால் மற்ற மொழிகளை எளிதாக கற்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிப்பதாக கூறினார்.

2017 வரை நோபல் பரிசு வென்றவர்களில் 90 சதவீதம் பேர் தமது தாய்மொழியில் கல்வி கற்றவர்கள் என்று கூறிய வெங்கையா நாயுடு, மற்றொரு ஆய்வில் தமது தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகள் தான் உலகளவில் முன்னணி வகிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.



Tags : laureates ,Venkaiah Naidu ,Nobel , Nobel Prize, Mother tongue, Venkaiah Naidu
× RELATED உலக மகளிர் தினத்தை முன்னிட்டு...