×

பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்!!!

சென்னை : பக்ரீத் பண்டிகைக்கு 2 நாட்களே இடையில் உள்ள நிலையில் பக்ரீத் தொழுகை குறித்து அரசு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளது. இஸ்லாமியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தனி மனித இடைவெளியுடன் பொதுத்திடலில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள் வைத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

“இஸ்லாமிய மக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் திருநாள் வரும் 1 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக பக்ரீத் பண்டிகைகளில் இஸ்லாமியர்கள் அனைவரும் மசூதி அல்லது திடல்களுக்குச் சென்று சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கமாகும். தற்போது நாடெங்கும் கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பல மாநிலங்களில் நிலவி வருகிறது.

இருந்தாலும் கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கு உத்தரவை தளர்த்தி அம்மாநில முதல்வர் உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் தினத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நடத்திக் கொள்ளவும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அனுமதி அளித்துள்ளார்.

அதேபோன்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் அன்றைய தினம் ஊரடங்கை முழுவதுமாக தளர்த்தி, இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு என்பது நீடித்து வந்தாலும், 10 ஆயிரம் ரூபாய்க்குக் கீழ் வருமானம் உள்ள வழிபாட்டுத் தலங்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோன்று வரும் 31-ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு என்பது முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக முதல்வர் அடுத்து வரும் நாட்களில் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஆகஸ்டு 1-ம் தேதி இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை வரவிருப்பதால், அன்றைய தினம் இஸ்லாமியர்கள் அனைவரும் மசூதிக்கு அல்லது திடல்களுக்குச் சென்று சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம், தற்போது கரோனா பரவல் காரணமாக சிறப்புத் தொழுகை நடைபெறுமா அல்லது வீடுகளிலேயே ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா என்ற குழப்பத்தில் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் உள்ளனர்.

பக்ரீத் பண்டிக்கைக்கு இன்னும் 2 தினங்களே உள்ளன. கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநில முதல்வர்களைப் போன்று ஹஜ் பெருநாள் சிறப்புத் தொழுகையை மசூதிகள் மற்றும் திடல்களில் தனிமனித இடைவெளியுடன் நடத்திக் கொள்ள தமிழக அரசு விரைந்து அனுமதி தர வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், பள்ளிவாசல் மற்றும் திடல்களில் தொழுகைக்கு வருபவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்வது, தொழுகைக்குத் தேவையான தொழுகை விரிப்புகளை தனித்தனியே கொண்டு வருவது, முதியவர்கள், குழந்தைகள் வீடுகளிலேயே தொழுகை செய்து கொள்வது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு சிறப்புத் தொழுகை நடத்திட அனுமதி வழங்க வேண்டும்”.

இவ்வாறு முஸ்தபா கோரிக்கை வைத்துள்ளார்.

Tags : government ,festival ,Tamil Nadu ,Muslim League , Bakreed Festival, Permission, Government of Tamil Nadu, Tamil Nadu Muslim League, Request
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...