×

ஆற்காடு அருகே 200 ஆண்டு பழமைவாய்ந்த அம்மன் கோயிலை சுற்றி தேங்கிய மழைநீர்: பக்தர்கள் கடும் அவதி

ஆற்காடு: ஆற்காடு அருகே 200 ஆண்டு பழமைவாய்ந்த அம்மன் கோயிலை சுற்றி தேங்கியுள்ள மழை மற்றும்  கழிவுநீரால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல்விஷாரம்  பைபாஸ் சாலையில் 200 ஆண்டு பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற செவிட்டு அம்மன் என்கிற கிராம தேவதை கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 5 வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளிலும், விசேஷ நாட்களிலும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது.

இந்த கோயிலுக்கு மேல்விஷாரத்தில் உள்ள தஞ்சாவூரான் பகுதி, பாக்தினி பகுதி மற்றும் கீழ்விஷாரம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் இந்த கோயிலைச் சுற்றி  சமீபத்தில் பெய்த மழை நீர் மற்றும் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் கடந்த 2 ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாத நிலை  ஏற்பட்டதால்  மன வேதனையில் உள்ளனர். மேலும் தேங்கிய நீரில் அதிக அளவு கொசு உற்பத்தியாகி  சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தற்போது கொரோனா அச்சத்தில் உள்ள பொதுமக்கள் தேங்கியுள்ள மழை நீரால் டெங்கு காய்ச்சல் ஏற்படுமோ என்ற பயத்தில் உள்ளனர்.

மேலும் இந்த மழை நீர் வெளியேறும் கல்வெர்ட் பகுதியில் கோழி கழிவுகளை கொண்டு வந்து போட்டு விட்டு செல்வதால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக நடைபயிற்சி செய்பவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே கோயிலைச் சுற்றி தேங்கியுள்ள மழைநீர் கலந்த கழிவு நீரை  வெளியேற்றி பக்தர்கள் கோயிலுக்கு தடையின்றி செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோழி கழிவுகளை கொண்டு வந்து போடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Devotees ,Arcot ,Amman Temple , Arcot, Ancient Goddess Temple, Rainwater
× RELATED இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை...