×

அருப்புக்கோட்டை மெயின் பஜாருக்கு வந்து, செல்ல பொதுமக்களுக்கு தடை: தடையை மீறும் வாகன ஓட்டிகள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நாளுக்குநாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.  நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் புதுப்புது யுக்திகளை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மெயின் பஜாருக்கு சில்லறை வியாபாரிகள் மட்டுமே பொருட்கள் வாங்க வரவேண்டும். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள காய்கறி, பலசரக்கு கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என ஒரு அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது. இதனை நடைமுறைப்படுத்த தங்கச்சாலை தெரு, அகமுடையார் மகால், நாடார் சிவன்கோவில் பகுதி, பழைய பேருந்து நிலையம் போன்ற இடங்களில் மெயின் பஜாருக்கு வரும் பாதைகள் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் அடைக்கப்படாத தெருக்களின் வழியாக வந்து சத்தியமூர்த்தி பஜார், திருச்சுழி ரோடு, பழைய பேருந்து நிலைய சாலை, நாடார் சிவன்கோவில் பகுதி போன்ற இடங்களில் காலை முதல் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகனங்கள் நகர முடியாமல் வரிசை கட்டி நின்றது. போக்குவரத்தை சரிசெய்ய போதுமான போலீசாரும் இல்லை. மொத்தத்தில் சமூக இடைவெளி என்பது இல்லாமல் போனது. இதனால் கொரோனாவை ஒழிக்க எடுத்த முயற்சிகள் எதிர்பார்த்த நல்ல விளைவுகளை தராமல் எதிரான விளைவுகளை ஏற்படுத்துவது போல் உள்ளது.

எனவே அருப்புக்கோட்டையில் முழு ஊரடங்கு அமுல்படுத்தினால் தான் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கமுடியும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை வட்ட அவசர நிகழ்வு மேலாண்மை அலுவலரும், துணை ஆட்சியருமான சங்கீதா கூறியதாவது, ‘அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த நாங்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். நேற்று முதல் பொதுமக்கள் பஜார் பகுதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளோம். ஆனால் பொதுமக்கள் இதை அலட்சியப்படுத்துகின்றனர்.

மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் கொரோனா தொற்று சமூக பரவலை கட்டுப்படுத்த முடியும். தினமும் பஜார் பகுதிகளுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கிச்செல்ல வேண்டும். பஜாருக்கு பொருட்கள் வாங்க வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என கூறினார்.

Tags : public ,Motorists ,Aruppukottai Main Bazaar , Aruppukkottai, Main Bazaar, Prohibited to the public
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...